×

தலைமை செயலகத்தில் வேண்டியவர்களுக்கு விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு: அமைச்சர் விளக்கம் அளிக்கவும் கோரிக்கை

சென்னை: தலைமை செயலகத்தில் வேண்டியவர்களுக்கு விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலக ஊழியர்கள் சிலர் கூறியதாவது: சென்னை தலைமை செயலகத்தில் நேரடி நியமனத்திலும், பதவி உயர்விலும் உதவி பிரிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். 1984-85, 85-86 மற்றும் 88-89ம் ஆண்டுகளில் நேரடியாக உதவி பிரிவு அலுவலர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்களுக்கும் மற்றும் உதவியாளர் பதவியில் இருந்து உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கும் சீனியாரிட்டி நிர்ணயம் செய்வதில் காலம் தொட்டு பல்வேறு அரசு விதிகள் உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருக்கிறது. ஆனால் அரசு அவற்றையெல்லாம் கடைபிடிக்காமல் அடுத்த நிலை பதவி உயர்வுகளை தொடர்ந்து 23 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இவ்வாறு பதவி உயர்வுகள் பெற்றவர்கள் ஓய்வும் பெற்று அதிக அளவு ஓய்வூதியங்களையும் விதிகளுக்கு மாறாக பெற்று வருகிறார்கள்.

1988-89ம் ஆண்டு நேரடியாக நியமனம் பெற்ற உதவி பிரிவு அலுவலர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு மெதுவாக நகர்த்தப்பட்டதால், 23 ஆண்டுகள் கழித்து தமிழக அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனாலும் இந்த உத்தரவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் சீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்தது. இதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் தலைமை செயலாளர் சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தந்திரமாக 7 மனுதாரர்கள் தாங்கள்தான் சீனியர்கள் என்று பொய்யான ஒரு மனுவை தாக்கல் செய்தனர். மேலும், அரசு பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்கு ராக்கெட் வேகத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.இப்படி, சென்னை தலைமை செயலகத்தில் தேவைப்படுபவர்களுக்கு பதவி உயர்வுகள் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டு வருகிறது. 1992ம் ஆண்டு மே மாதம் முதல் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருபவர்கள் சீனியரா? அல்லது 1993ல் பிப்ரவரியில் தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவர்கள் சீனியரா? என்பது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்தான் விளக்கம் அளிக்க வேண்டும்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உதவி பிரிவு அலுவலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்களோ அந்த வழக்கிற்கு தேவையான மூல ஆவணம் ஒன்று காணவில்லை. இதுபோன்ற ஆவணங்கள் காணாமல் போய் விடுவதன் மர்மம் குறித்து தலைமை செயலாளர்தான் நேரடி விசாரணை நடத்த வேண்டும். அப்படி செய்யாமல், கடந்த மாதம் 19ம் தேதி இது சம்பந்தமான வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து தவறான தகவல்களுடன் வாதத்தை முன் வைத்து இடைக்கால ஆணை ஒன்றினை பெற்றுள்ளனர். இப்படி ஏமாற்றும் கும்பல் ஒவ்வொரு துறையிலும் இருப்பதாக உளவுதுறைக்கும் தெரியும். அரசு நிர்வாகத்திற்கு பொறுப்பு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை தான். அந்த துறையிலேயே நிர்வாகம் சீர்குலைக்கும் நடவடிக்கைதான் நடைபெறுகிறது. முக்கிய கோப்பினை தொலைக்கும் அலுவலர்களை குறைந்தபட்ச நடவடிக்கையாக வேலை நீக்கம் செய்ய வேண்டும். அதேபோல அரசின் ஓரவஞ்சனையால் பாதிக்கப்பட்ட நேரடி நியமனம் பெற்ற உதவி பிரிவு அலுவலர்களின் முதுநிலையை அரசு விதிகளின்படியும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைகளின்படியும் சரியான முறையில் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு நிர்வாகத்திற்கு பொறுப்பு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை தான். அந்த துறையிலேயே நிர்வாகம் சீர்குலைக்கும் நடவடிக்கைதான் நடைபெறுகிறது.


Tags : Secretariat , Allegations, promotion , rules , regulations
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...