×

வாகன சோதனை என்ற பெயரில் வசூலில் கலக்கும் போலீசார்

ஆன்மிக நகராம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாதோறும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருவண்ணாமலையில் இருசக்கர வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

திருவண்ணாமலை எஸ்பி சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை- செங்கம் சாலை, வேலூர் சாலை, திண்டிவனம் சாலை, சாத்தனூர் அணை சாலை என நகரின் முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை நடத்துகிறார்கள். அப்போது அந்த வழியாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி,  லைசென்ஸ் இருக்கிறதா? ஹெல்மெட் இருக்கிறதா? என சோதனை செய்யும் போலீசார், கண்துடைப்புக்காக ஒரு சில வழக்குகளை மட்டும் பதிவு செய்துவிட்டு, லைசென்ஸ் இல்லாதவர்களிடம் ₹200 முதல் கிடைத்தவரை பணம் வசூல் செய்கிறார்கள். லைசென்ஸ் வைத்திருப்பவர்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கிறார்கள். இவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களிடம் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு, தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். நாளுக்கு நாள் இந்த சோதனை திருவண்ணாமலையில் அதிகரித்து வருவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் மன வேதனையில் உள்ளனர்.

துட்டு வெட்டு... பைல் நகரும்!
கோவை துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கஞ்சா, ஒரு நம்பர் லாட்டரி விற்பனை படுஜோராக நடக்கிறது. இது தொடர்பாக யாரேனும் புகார் மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், கஞ்சா கும்பல் மற்றும் லாட்டரி கும்பலின் ‘கவனிப்பு’ பலமாக உள்ளது. மேலும் இக்காவல்நிலையத்தில், கட்டப்பஞ்சாயத்தும் படு ஜோராக நடக்குது. வழக்கு பதிவுசெய்யாமல் விவகாரத்தை பேசி முடித்த பிறகு, இருதரப்பில் இருந்தும் பீஸ் கொடுக்கப்படுகிறது. இதனால், மூன்று ஸ்டார், இரண்டு ஸ்டார் அதிகாரிகள் ஒரே குஷி. கருப்பு கயிறு அணிந்த மூன்று ஸ்டார் அதிகாரிக்கும் ஒரே மகிழ்ச்சி. இதேபோல், இங்குள்ள மகளிர் காவல் நிலையத்திலும் கொண்டாட்டம்தான். காந்தி தாத்தா உருவம் பொறித்த நோட்டு இல்லாமல், யாரும் புகார் மனு கொண்டு வராதீங்கப்பா... என இங்குள்ள பெண் அதிகாரி உத்தரவு போடுகிறார். பணம் மோசடி, கார் கடத்தல், பைக் திருட்டு, கொலை, கொள்ளை என எந்த குற்றச்செயல்களாக இருந்தாலும் சரி, துட்டு வெட்டுனாதான் மேல் நடவடிக்கை பாயுது, பைல்களும் நகர்கிறது. ‘‘இப்படியே பழகிட்டதால, ஒண்ணும் செய்ய முடியல...’’ என்கிறார்கள் இங்குள்ள காவல் அதிகாரிகள்.

ஸ்டேஷனில் நடக்கும் மர்ம பேரங்கள்
மாங்கனி மாவட்டம், சங்ககிரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ேபாலீஸ் ஸ்ேடஷனில் கல்லா களை கட்டுவது தொடர்கதை. இது ஒரு புறமிருக்க, சமீபகாலமாக பரபரப்பு புகார்கள் எது வந்தாலும் முடிந்தவரை குழிதோண்டி புதைக்கும் முயற்சிகள் தான், இங்கு பிரதானமாக நடக்குதாம். இப்படி தான், பரபரப்பான பாலியல் வீடியோவில் சிக்கிய கட்சி பிரமுகரை காப்பாற்ற ேபரம் நடந்ததாம். பாதிக்கப்பட்ட பெண், அதிர்ச்சியூட்டும் புகார் தெரிவித்த நேரத்தில், ஹோமோ செக்ஸ் என்று மொக்கை வழக்கு போட்டு, ரூட்டை மாத்தினாங்களாம். அப்புறம் விஷயம் பூதாகரமானவுடன் இது, சிட்டி லிமிட்டுக்கு சம்பந்தப்பட்ட சம்பவம் என்று சப்பை கட்டு கட்டினாங்களாம். இது ஒரு சாம்பிள் மட்டும் தான். இந்த மாதிரி எத்தனையோ மர்ம பேரங்கள் நடந்து கிட்டே தான் இருக்கு. சம்பந்தப்பட்ட உயரதிகாரி சாட்டையை சுழற்றினால் மட்டுமே, வசூல் மையமாகி விட்ட ஸ்டேஷனின் வண்ணம் மாறி, பேரங்கள் குறையும் என்கின்றனர் நேர்மையான காக்கிகள்.

மது பாட்டில்களை அமுக்கிய மதுவிலக்கு
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியன்று மது விற்று போலீசிடம் வசமாக மாட்டிக் கொண்டார் ஆசிரியர் ஒருவர். மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியரே மதுக்கடைகளுக்கு விடுமுறை அன்று சட்டவிரோதமாக புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து கடை விரித்தது தான் கொடுமையிலும் கொடுமை. இந்த ரகசியத்தை அவரிடம் சரக்கு வாங்கிய யாரோ ஒருவர் மதுவிலக்கு போலீசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, கடமை தவறாத அந்த காவல் அதிகாரி ஆசிரியரை காருடன் மடக்கி அவரிடம் இருந்த 117 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். ஆசிரியரை சிறையில் அடைப்பதா? வெளியில் விடுவதா என்று ஒரு நாள் முழுவதும் குழம்பிய போலீசார் இறுதியில் 72 பாட்டில்களுடன் ரோந்து பணியில் இருந்த போது அவரை பிடித்ததாக வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டனர். கைப்பற்றியது 117, கணக்கு காட்டியது 72 என்றால் எஞ்சியிருந்த 45 மது பாட்டில்கள் எங்கே என்பது போலீசாருக்கே வெளிச்சம்.

Tags : Vehicle testing , Cops mixing , name , vehicle, testing
× RELATED இரவு பகலாக ஓய்வின்றி கொரோனா...