×

நிலத்தின் ஈரப்பதத்திற்கு ஏற்ப தண்ணீர் இறைக்கும் மின்மோட்டார்: பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

வேதாரண்யம்: நிலத்தின் ஈரப்பதத்திற்கு ஏற்ப தண்ணீர் இறைக்கும் மின்மோட்டாரை கண்டுபிடித்து வேதாரண்யம் மாணவன் சாதனை படைத்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தை சேர்ந்த விவசாயி கணேசன்- விமலா தம்பதியர் மகன் அருள்பாலா (16). இவர் கந்தர்வகோட்டையில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் அருள்பாலா, விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நிலத்தின் ஈரபதத்தை அறிந்து அதற்கேற்றவாறு தண்ணீர் இறைக்கும் வகையில் மின்மோட்டாரை கண்டுபிடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கண்டுபிடித்த மின்மோட்டாரை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டு முதல் பரிசு பெற்றார். அதே ஆண்டு மாநில அளவிலும் முதலிடம் பெற்றார். 2017ம் ஆண்டு பாண்டிச்சேரியில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றார்.
இதே போல் இந்த ஆண்டு கடந்த வாரம் தஞ்சையில் உணவு கழகம் சார்பில் நடைபெற்ற அகில இந்திய கண்காட்சியில் மின்மோட்டார் வைக்கப்பட்டு இரண்டாம் பரிசினை பெற்றார். இதுவரை அறிவியல், கராத்தே, நாட்டு நலப்பணித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 45க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், பதக்கமும் பெற்றுள்ளார்.

இது குறித்து மாணவர் அருள்பாலா கூறியதாவது: தற்போது உலக அளவில் தண்ணீர் மற்றும் மின்சாரம் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், விவசாயத்திற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் ₹10ஆயிரம் செலவில் இந்த மின்மோட்டாரை கண்டுபிடித்து உள்ளேன். விவசாயிகளின் வயல்களில் ஈரப்பதத்தை அறிந்து தேவையான அளவு தண்ணீரை மட்டுமே இந்த மோட்டாரால் இறைக்கலாம். நிலத்தின் ஈரப்பதம் அதிகமானால் தானாகவே மோட்டார் நின்று விடும். இதனால் தண்ணீரையும், மின்சாரத்தையும் சிக்கனப்படுத்தலாம் என்றார்.

Tags : schoolboy , Waterproof electric, motor according ,humidity of the ground, discovery ,schoolboy
× RELATED மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு