×

சீனாவுடன் தொடர்பை வெளிக்காட்டும் சிங்கிகுளம் சமண மலை கல்வெட்டுகள்: நெல்லைக்கு பெருமை சேர்க்கிறது

நாங்குநேரி: சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை தந்ததால் இந்திய - சீன உறவு வளருமென அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கான உறவுகளுக்கு தமிழகத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. அதில் நெல்லை மாவட்டம் சிங்கிகுளத்தில் உள்ள கோயில் கல்வெட்டுக்களில் சீனர்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த தொடர்பு குறித்து கூறப்பட்டுள்ளது. நாட்டின் தென்கோடியில் உள்ள நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் சிங்கிகுளம், மிகவும் பழமையான கிராமம் ஆகும். இங்கு விவசாயமே பொருளாதார முதுகெலும்பாக விளங்குகிறது. இங்குள்ள சமண மலை மீது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண மடம் அல்லது சமணப்பள்ளி அமைந்துள்ளது. அதனுடன் பகவதி அம்மன் கோயிலும் இணைந்துள்ளது. சைவமும் சமணமும் ஒன்றுக்கொன்று நேரெதிர் என்றாலும் இங்குள்ள மக்கள் இரு வழிபாடுகளையும் சேர்த்து வணங்கி வருகிறார்கள். இது சமய நல்லிணக்கத்திற்கான மையமாக அப்பகுதியினரால் குறிப்பிடப்படுகிறது.

இந்த கோயிலில் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர் ஆட்சி செய்த கிபி 1264 மற்றும் கிபி 1276 ஆகிய ஆண்டுகளில் இரு கல்வெட்டுகள் உள்ளன. அவை பாண்டிய மண்டலத்தை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பொறிக்கப் பட்டதாகும் அக்காலத்தில் பெரும் நகரங்களில் எழுதப்படும் தமிழ்க் கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்தி எனப்படும் பகுதி இருப்பது வழக்கம். அதுபோலவே இந்த கல்வெட்டுக்களும் மெய்க் கீர்த்தியுடன் அமைந்துள்ளன.இதன் மூலம் இன்று கிராமமாக விளங்கும் சிங்கிகுளம் பழங்காலத்தில் பெரும் வணிகத் தலமாகவும் நகர அமைப்பையும் கொண்டு இருந்தமையை அறிய முடிகின்றது பொதுவாக தமிழ் இலக்கியத்தில் மெய்கீர்த்தி என்பது கடவுளையும், அதன் அடுத்த நிலையிலுள்ள ஆட்சியாளர்களையும் பெருமைப்படுத்தி பாடும் செய்யுள் ஆகும். அது போலவே இங்குள்ள கல்வெட்டிலும் மெய்க்கீர்த்தி என்னும் செய்யுள் வரிவடிவ பகுதி அமைந்துள்ளது.“எருத்தமேறி கண்டநற்கோசலம், துளுவம் குதிரம், கூச்சரம், போசலம், மகதம், பொப்பளம், புண்டரம், கலிங்கம், ஈழம், கடாரம், தெலிங்கம், சோனகம் சீனம் முதலாவிதி முறை திகழ’’என கல்வெட்டில் மெய்கீர்த்தி தொடர்கிறது. இந்த கல்வெட்டு மூலம் தமிழகத்தின் தென் பகுதி வரைக்கும் சீனர்களின் தொடர்பு இருந்ததை அறியலாம்.

Tags : Singigulum Samana Hill Inscriptions ,China ,Paddy boasts. Singigulum Samana , Singigulum Samana ,hill inscriptions, expressing connection , boasting paddy
× RELATED சீனா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு