×

கார்ப்பரேட் கம்பெனிகளால் தலைகுனிந்தாலும் மவுசு குறையாத கோலி சோடா, கலர்: சிறுதொழில் அந்தஸ்தை தந்து காப்பாற்ற கோரிக்கை

வேலூர்: உள்நாட்டு தயாரிப்பு பானமான கோலி சோடா பானத்துக்கான மவுசு குறையாத நிலையில் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு சிறுதொழில் என்ற அந்தஸ்தை வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் பெட்டிக்கடை, மளிகை கடை என்றால் அக்கடையின் முன்பக்கம் தண்ணீர் நிரப்பப்பட்ட மண்ணால் ஆன தொட்டி இருக்கும். அதில், கோலி சோடா, கலர், ஜிஞ்சர் சோடா என்று பாட்டில்கள் வரிசை கட்டி வைக்கப்பட்டிருக்கும். இயற்கையான குளிர்ச்சியில் அன்றயை தினம் வயிற்று சூடால் ஏற்படும் அஜீரணம், வயிற்றுவலி ஆகியவற்றுக்கான சிறந்த ருசிமிக்க திரவ மருந்தாக கோலி சோடா விளங்கி வந்தது.இதுதவிர 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களிலும் கோலி சோடா பிரதான பானமாகவும், அவித்த நிலக்கடலை, பொரி, கடலை போன்றவை நொறுக்குத்தீனிகளாகவும் பலரது பிழைப்புக்கு ஆதாரமாகவும் விளங்கின. இவ்வாறு பொருளாதாரத்திலும், மக்களுக்கான சுயவேலைவாய்ப்பிலும் தனது பங்கை அளித்து வந்ததுடன், நிரந்தரமாக வாடிக்கையாளர் சங்கிலி தொடர்பு மூலம் கோலோச்சி வந்த கோலி சோடா, கலர், ஜிஞ்சர் ஆகியவற்றுக்கு பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் பெரும் சறுக்கல் விழ ஆரம்பித்தது.

கோகோ கோலா, பேண்டா, ஸ்பிரைட் என்று விதவிதமான கார்ப்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்கள் இந்திய சந்தையை தங்கள் கோரக்கரங்களால் இறுக்க ஊருக்கு 10க்கும் மேற்பட்ட கோலி சோடா உற்பத்தி கூடங்கள் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கின. இந்திய சந்தையில் கால்பதித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலில் கோலி சோடா பாட்டில்களை உற்பத்தி செய்த நிறுவனங்களை சுற்றி வளைக்க அதன் உற்பத்தி முடக்கப்பட்டது. இவ்வாறு பல வகையிலும் உள்நாட்டில் குடிசைத்தொழிலாக பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை நகர்த்த உதவிய கோலி சோடா உற்பத்தியானது வெறும் 5 சதவீதம் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்தது. அந்நிறுவனங்களும் பாட்டில்கள் கிடைக்காமல் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நோயாளியால் தவித்து வருகின்றன. இந்த நிலையில் வேலூர், சென்னை உட்பட குறிப்பிட்ட நகரங்களில் ஓரிரு இடங்களில் கோலி சோடா, கலர், ஜிஞ்சர் சோடா விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது.

இதுதொடர்பாக வேலூரில் சோடா விற்பனையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்களின் பக்கவிளைவுகளை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். அதனால் எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் சோடாவை விரும்பி அருந்துகின்றனர். குறிப்பாக அதனுடன் எலுமிச்சை சாறும், சிறிதளவு உப்பும், மிளகும் சேர்த்து வழங்கும்போது அவர்களுக்கு வெறும் ₹15, ₹20ல் நிறைவான குளிர்பானம் அருந்தும் திருப்தி கிடைக்கிறது.இனிமேலாவது அரசு தனது போக்கை மாற்றி உண்மையான சுதேசி நுகர்வு பொருள் உற்பத்திக்கு ஊக்கமளிக்க வேண்டும்’ என்று கூறினார்.இதுதொடர்பாக கோலி சோடா உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் சோடா தயாரிப்பவர்கள் இன்னும் உள்ளனர். இத்தொழில் நலிந்து வந்தாலும் அதை விட்டு விடாமல் பலரும் இத்தொழிலை செய்துவருகின்றனர். மக்களிடம் மீண்டும் கோலி சோடாவுக்கு மவுசு கூடி வருகிறது. அதை விட்டுவிடக்கூடாது’ என்றனர்.

உடைக்கிறவன் பிஸ்தா
முன்பு கோலி சோடாவை வாங்கி பாட்டிலில் உள்ள கோலியை உள்ளே தள்ளுவதற்கு என்றே கட்டை ஒன்றை கடையில் வழங்குவார்கள். அதை வாங்கி பாட்டில் மேல் அடித்து கோலியை உள்ளே தள்ளி, பாட்டிலை பக்குவமாக சாய்த்தால் மட்டுமே சோடாவை சுலபமாக பருக முடியும். அது ஒரு கலை. அதேபோல் பாட்டிலில் உள்ள கோலியை கை விரல்களால் அடித்து உடைப்பார்கள். அது தங்களுக்கு கவுரவம், தனது பலத்தை காட்டும் செயலாகவும் காட்டுவார்கள்.


Tags : Goli Soda, Color,Small Business, Status
× RELATED அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்