×

கிணறு, கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணியின் போது விஷவாயு தாக்கி உயிர் பலியாவதை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு: தஞ்சை இன்ஜினியர் சாதனை.

தஞ்சை: கிணறு, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க புதிய கருவியை தஞ்சையை சேர்ந்த இன்ஜினியர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே சரபோஜிநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் அமிர்தகணேசன். எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் 12 ஆண்டுகளாக 600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டு பிடித்துள்ளார். விவசாயம், ராணுவம், ஊனமுற்றோர் மற்றும் மருத்துவத்துக்கு தேவையான அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.
தற்போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். கிணறு, கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்யும்போது விஷவாயு வெளியேறினால், அதை அந்த நபர் உணரும் முன்பே அந்த கருவி கண்டுபிடித்து ஒலியை எழுப்பி வேலை செய்யும் நபரை எச்சரிக்கும். பிறகு பிராணவாயு தானாக கிடைக்கும் வகையில் செயல்படும். உடனடியாக அந்த பிராணவாயுவை பயன்படுத்தி வெளியேற செய்யும்.

இதேபோல் கீழே விஷவாயு இருக்கிறது. உள்ளே செல்லும் நபர் ஆபத்தில் இருக்கிறார் என மேலே உள்ள நபருக்கு எச்சரிக்கை செய்யும். இது உள்ளே சென்ற நபருக்கு உடனடியாக உதவி செய்ய வசதியாக இருக்கும். பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் கிணறு, கழிவுநீர் தொட்டிகளில் விஷவாயுக்கள் இருக்கும். அப்படி இருக்கும் தொட்டிகளில் விஷவாயுக்கள் உள்ளதா என்பதை மேலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். இந்த கருவி ஒரு குழாயில் இணைக்கப்பட்டு இருக்கும், அதை தொட்டியில் விடும்போது விஷத்தன்மை இருந்தால் அந்த கருவி உடனடியாக அதிர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும். சில நேரங்களில் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அதில் இருந்து வாயுக்கள் வெளியேறி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும்.

இதை தவிர்க்க தலையில் ஒரு ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அந்த ஹெல்மெட்டில் விஷவாயுவை கண்டறியும் ஒரு கருவி, பிராணவாயுவை கொடுக்கும் கருவி மற்றும் ஒலியை ஏற்படுத்தி தொட்டிக்குள் இறங்கியவரை எச்சரிக்கும் ஒரு கருவி இருக்கும். இதேபோல் மேலே இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க சிகப்பு விளக்குடன், ஒலியுடன் கூடிய ஒரு கருவியும் இருக்கும்.இதுகுறித்து அமிர்தகணேஷ் கூறும்போது, இந்த கருவி மூலம் இனி எங்கும் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படாத வகையில் முற்றிலும் தடுக்க முடியும். உலகளவில் இந்தியாவில் தான் அதிகமாக இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. இதை தவிர்க்கவே இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஆதரவு தந்தால் இந்த கருவியை ₹1500ல் இருந்து ₹2000க்குள் செய்து தர முடியும் என்றார்.

விஷவாயு தாக்கி 144 பேர் பலி
2013ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை தமிழகத்தில் மட்டும் 144 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். இந்திய அளவில் நடந்த விஷவாயு தாக்கி இறந்தவர்களில் 45சதவீதம் தமிழகத்தில் நடந்தவை. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கிணறு, கழிவுநீர் தொட்டி ஆகியவற்றில் இறங்கி சுத்தம் செய்யும்போது அதில் வெளியாகும் விஷவாயுக்கள் மூலம் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : well ,Tanjore Engineer , New tool ,prevent poisoning, well ,sewer tank cleanup ,process
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை