×

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் இளம்பெண்ணுக்கு வலி இல்லா சுக பிரசவம்: முதல் முறையாக நடந்தது

நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக வலியில்லா சுகப்பிரசவம் நடத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி போன்றது ஆகும். 10 மாதங்கள் கருவை சுமந்து, அந்த பெண் குழந்தையை பெற்றெடுக்கும் வலி என்பது யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது ஆகும். அதனால் தான் தாய்மை  என்பது புனிதமாக போற்றப்படுகிறது. ஆனால் நவீன யுகத்தில் இப்போது பிரசவங்கள் எல்லாம் அறுவை சிகிச்சை மூலம் அதிகம் நடைபெறுகின்றன. சில தனியார் மருத்துவமனைகள் பணத்துக்காக, சுக பிரசவத்தை கூட அறுவை சிகிச்சைக்காக  மாற்றி விடுவதாகவும் புகார்கள் உண்டு.

சுக பிரசவம் என்பதே இப்போது வியப்பாகி விட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் சுக பிரசவத்துக்கு  முயற்சிக்கிறார்கள். சுக பிரசவத்தை குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பது என்பது, மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த காலத்தில் உள்ள உணவு முறைகள், பெண்ணின் உடல் நலம் உள்ளிட்டவை சுக பிரசவத்தை கேள்விக்குறியாக்கி  உள்ளன. இந்த நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதல் முறையாக வலியில்லா சுகப்பிரசவம் நடத்தப்பட்டு இருக்கிறது. தாயும், குழந்தையும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இது  குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் நேற்று நிருபரிடம் கூறியதாவது:வெளிநாடுகளிலும் இன்னும் பிற தனியார் மருத்துவமனைகளிலும் வலியில்லா சுகப்பிரசவம் நடத்தப்படுகிறது. இடுப்புப் பகுதியிலுள்ள நரம்பில் மட்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பிரசவம் செய்யப்படுகிறது. இந்த வகை பிரசவத்தின் போது  தாய் சுய நினைவை இழக்க வேண்டிய நிலை இல்லை. குழந்தை பிறப்பதை அவர் பார்க்கலாம்.  இடுப்பு பகுதியில் மட்டும் வலி இருக்காது. சில மணி நேரங்களில் சகஜ நிலைக்கு வந்து விடும். சுக பிரசவத்தின் போது பெண்கள் கடுமையான  வலிகளை உணர்கிறார்கள். அந்த வலி இல்லாமல் சுக பிரசவம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற பெண்ணின் கற்பனையை மருத்துவ துறை நிஜமாக்கி உள்ளது. இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே  இது போன்ற பிரசவங்கள்  நடந்து வந்தன.

இப்போது முதல் முறையாக கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் வலி இல்லா சுக பிரசவம் நடத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை மற்றும் மகப்பேறு  துறை மற்றும் பொது மருத்துவத் துறையினர் இணைந்து வலியில்லா சுகப்பிரசவத்தை நடத்தி உள்ளனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவை பாராட்டுகிறேன். விருப்பம் உள்ள  பெண்கள் இனிமேல் இதுபோன்று வலி இல்லா சுகப்பிரசவத்தை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பெண்களின் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். மயக்கவியல் துறை மருத்துவர் டாக்டர் எட்வர்ட் ஜான்சன் மற்றும் டாக்டர்கள் முத்து செண்பகம், ஆறுமுக செல்வி உள்ளிட்ட குழுவினர் இந்த சிகிச்சையை மேற்கொண்டு உள்ளனர்.

Tags : Kanniyakumari Government Medical College ,Kanyakumari Government Medical College , For the first time in the Kanyakumari Government Medical College
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் ெகாழு கொழு குழந்தைகள் போட்டி