×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 15 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கும், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் ஆதரவாக திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன், மமக  தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, நடிகர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். விக்கிரவாண்டியில் திமுக,  அதிமுக வேட்பாளர்களும், நாங்குநேரியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களும் மற்றும் கட்சித் தலைவர்களும் இன்று இறுதிக்கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. நாளை மறுநாள் 21-ம் தேதி இரு தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பணியில் 1712 அரசு ஊழியர்கள்:

நாங்குநேரியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள்  வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குசீட்டுகள் பொருத்தப்பட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  அதன்படி 299 வாக்குச்சாவடிகளில் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 1712 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (20ம் தேதி) மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வாக்குச்  சாவடிக்குரிய பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததால், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு தொகுதியிலும் துணை ராணுவப்படையினர்  மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று 19ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 21ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு  எண்ணிக்கை தினமான 24ம் தேதியும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nanguneri ,Vikramaditye ,election campaign ,Voting ,Vidarbha , Nanguneri, Vidarbha constituency by-election: 15-day election campaign ends: Tomorrow
× RELATED நாங்குநேரியில் வறுமையால் தீக்குளித்த தொழிலாளி சாவு