×

பாஜக ஆட்சியில் தான் படைகளை வலிமைப்படுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது: அரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

சிர்சா: அரியானா மாநிலத்தில் வருகிற 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற  காங்கிரசும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் புனித தலத்தை 70 ஆண்டுகளாக  பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்த நிலைக்கு முடிவுகட்டியிருப்பதாகவும், கர்தார்பூர் பாதை அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

1947-ம் ஆண்டில் பிரிவினையின்போது எல்லையை வகுத்தவர்கள் ஒரு 4 கிலோமீட்டர் தூரம் தாண்டி சிந்தித்திருந்தால், குருவிடமிருந்து பக்தர்களை பிரித்துவைக்க வேண்டிய நிலை வந்திருக்காது என்றும் அவர் காங்கிரசை சாடினார். காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கலாச்சாரத்தை ஒருபோதும் மதித்ததில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார். டெல்லியில் இருந்த அரசு தூங்கிக் கொண்டிருந்ததால் காஷ்மீரின் நிலை மோசமாகி, தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள  காஷ்மீர் பகுதி பறிபோனதாகவும், ஜம்மு, லடாக் பகுதிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். கொலை, பாலியல் வன்முறைகள் மூலம் பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, ஹரியானா மாநிலம் ரேவாரியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, நாட்டில் முன்னர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அவர்களது வீடுகளுக்குள் புகுந்து கொன்றொழிப்பதாகவும், தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்தவர்கள் இன்று உலகின் முன் கதறி அழுதுகொண்டிருப்பதாகவும் கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, படைகளை வலிமைப்படுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், இன்று மிகவும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடங்கி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்கள் வரை இடம்பெற்றிருப்பதாகவும் பிரதமர்  தெரிவித்தார். முன்னர் இருந்த அரசு தேஜாஸ் போன்ற விமானங்களை மேம்படுத்தவில்லை என்றும், இன்று கடற்படை மற்றும் விமானப் படையில் ஈடுபடுத்த அவை தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார்.

Tags : Modi ,talks ,election ,BJP ,Haryana ,election campaign , Prime Minister Modi talks in Haryana election campaign
× RELATED சொல்லிட்டாங்க...