வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் பொதுச்சபையின் 91ம் கூட்டத்தை 2022ம் ஆண்டு இந்தியா நடத்துகிறது

டெல்லி : சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் பொதுச்சபையின்  91ம் கூட்டத்தை 2022ம் ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்துகிறது.  நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்த கூட்டத்தை இந்தியாவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. நேற்று இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்டர்போல் விவரம்

இன்டர்போல் என்பது (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது.

அமித்ஷாவின் முன்மொழிவு


இந்நிலையில் இன்டர்போல் பொதுச்சபையில் 91ம் கூட்டத்தை 2022ம் ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்துகிறது என்று சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் நிதின் வாகன்கர் டெல்லியில் செய்தியாளா்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்டர்போலின்  தலைமைச் செயலாளார் ஜெர்கன் ஸ்டோக், கடந்த ஆகஸ்டில்  இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது  மஹாத்மா காந்தியின் 75வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு, டெல்லியில் இண்டர்போல் கூட்டத்தை நடத்தலாம் என்ற திட்டத்தை அமித்ஷா கூறினார். இண்டர்போலின் சர்வதேச அகடமியின், பிராந்திய மையமாக இந்தியா இருக்க வேண்டும் எனவும், இதற்காக உதவி மற்றும் உள்கட்டமைப்பு வசதியை செய்து தர இந்தியா தயாராக உள்ளதாகவும் அமித்ஷா எடுத்துரைத்தார்.

வாக்கெடுப்பில் இந்தியா வெற்றி


இந்நிலையில், சிலியின் சாண்டியாகோவில் இன்டர்போலின் 88வது பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 91வது கூட்டத்தை இந்தியாவில் நடத்துவதற்கான முன்மொழிவை, சி.பி.ஐ. இயக்குநர் ரிஷி குமார் சுக்லா சமர்ப்பித்தார்.அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இந்தியாவின் முன்மொழிவுக்கு உறுப்பு நாடுகள் பெருவாரியாக ஆதரவளித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து இன்டர்போல் பொதுச்சபையின் 91ம் கூட்டம் 2022ம் ஆண்டு டெல்லியில் நடைபெறுகிறது.


Tags : India ,victory ,meeting ,Interpol General Assembly , Interpol, Amit Shah, Proposal, India, Success
× RELATED நாக்பூரில் இன்று 3வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு