தமிழகம் முழுவதும் நடந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை :  தமிழகம் முழுவதும் நடந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா  மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவர்  துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
   
துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்கள்

நாகப்பட்டினம் பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ், மதுரை சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன், திருவண்ணாமலை செல்வன் ரகுநாத்,கும்பகோணம் இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். தருமபுரி பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, திருத்தணி முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பானி,மேட்டுப்பாளையம் சின்னட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி ஆகியோர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.  

திருச்சிராப்பள்ளி மாராடி கிராமத்தைச் சேர்ந்த குமார், புதுக்கோட்டை மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் ஆகியோர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.  காரைக்குடியைச் சேர்ந்த காந்திமதி, திண்டுக்கல் அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை ஆகியோர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
திருவாரூரைச் சேர்ந்த  ராஜமாணிக்கம் என்பவர் கம்பிவேலியில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருப்புவனம் திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த கவின்ராஜா என்பவர் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்தார்.


Tags : CM Palanisamy ,Announcement , Chief Minister Palanisamy, Announcement, Tragedy, Electricity
× RELATED அதிமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை...