×

ஏஜெண்டுகளுக்கு ரூ.15 லட்சம் பணம் கட்டி அமெரிக்காவிற்கு குடியேற முயற்சி : அடர்ந்த காடுகளை கடந்து மெக்சிகோ சென்றதாக இந்தியர்கள் கண்ணீர்

டெல்லி : சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேற முயன்று இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களது மோசமான பயண அனுபத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் இளைஞர்கள் பலர் ஏஜெண்ட் மூலம் அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டனர். சுற்றுலா விசாவில் ஈகுவடார் நாட்டிற்குச் சென்ற அவர்கள் தரைமார்கமாக பல நாடுகளை கடந்து மெக்சிகோ சென்றுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியாக, தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை மெக்சிகோ திருப்பி அனுப்பி வருகிறது. அந்த வகையில், சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 311 இந்தியர்களை மெக்சிகோ திருப்பி அனுப்பியது.அவர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பினர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிலர், கொலம்பியா, பெரு, பிரேசில், பனாமா என பல நாடுகள் வழியே அடர்ந்த காடுகளை கடந்து மெக்சிகோ சென்றதாக தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் தங்கி இருந்த போது, அந்நாட்டு போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அடர்ந்த காட்டில் வழியே கடந்து சென்றதால் பாதங்களில் காயம் ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக நாடு திரும்பியவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.குடிநீர் கிடைக்காமல் பனியனை பிழிந்து வியர்வையை குடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கு யுடியூப்-ல் இருந்த பதிவை நம்பி ஏஜெண்டுகளுக்கு ரூ.15 லட்சம் பணம் கட்டி புறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் சிலரும் மெக்சிகோ வழியே சென்றதாக கூறியதால் நம்பி பணத்தை கட்டியதாக அவர்கள் கூறினர்.

Tags : agents ,United States ,Indians ,Mexico , USA, India, Agent, Mexico, Youtube
× RELATED அஞ்சல் காப்பீடு முகவர்களாக பணிபுரிய...