×

வேப்பனஹள்ளி அருகே 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி அருகே 400 ஆண்டு பழமையான தலைவனுக்காக இறந்த குதிரை வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுக்கல்லுடன் கூடிய கல்வெட்டை, அருங்காட்சியக காப்பாட்சியர் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டப்பள்ளி என்ற இடத்தில் குதிரை வீரன் நடுகல்லுடன் கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் தகவல் அளித்ததையடுத்து, ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் சென்று நடுகல்லை பார்வையிட்டனர்.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமாக நடுகல் மட்டும் அதிகமாக காணப்படும்.  நடுகல்லுடன் சேர்ந்து கல்வெட்டு அரிதாக காணப்படும். இந்த நடுகல்லோடு கூடிய கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 4 அடிக்கு 6 அடி அளவில், நடுகல் வீட்டோடு அமைந்துள்ளது. இதில் தலைவன் சண்டையிடுவது போலவும், போரில் தலைவன் வீழ்ந்து இறந்ததையும், குதிரையும் மாண்டு போனதையும் சிறப்பாக காட்டியுள்ளனர்.

புதுப்பற்றில் உள்ள பல்லேரிப்பள்ளியில், தலைவனுடன் பாதுகாப்புக்கு குதிரை வீரன் செல்லும்போது, தலைவனை கொல்ல எதிரிகள் குதிரையுடன் வருகிறார்கள். தலைவனை காப்பாற்ற வீரன் எதிரியின் குதிரையை கொன்று அவர்களை வீழ்த்தி தானும் தன் குதிரையுடன் இறக்கிறான். இப்படி தலைவனுக்கான இறந்த வீரனின் சந்ததிக்கு பெரிய ஏரிக்கரையில் உள்ள நிலத்தை ஊர் மக்கள் தானமாக கொடுக்கிறார்கள். இது வீரனின் பரம்பரை, பரம்பரையாக இவர்களுக்கானது என்ற வாசகம் தெளிவாக குறிப்பிடுகிறது.

இறந்து போனவன் சிவபக்தன் என்பதை காட்டும் வண்ணம் மேற்பகுதியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவரும் உடன்கட்டை ஏறிய இவரின் மனைவியும் சிவலோகத்தை அடைவதும் காட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, 350லிருந்து 400 ஆண்டுகள் பழமையானதாகும். இவ்வாறு காப்பாட்சியர் கூறினார். இந்த ஆய்வுப்பணியில், ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ரவி, விஜயகுமார், மதிவாணன், மாருதி மனோகரன், கணேசன், டேவிஸ் பிரகாஷ் ஆகியேர் கலந்து கொண்டனர்.

Tags : Veppanahalli , Veppanahalli ,inscription ,400 year old
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு