×

குப்பை கழிவுகள், மழைநீரால் இறந்தவர் உடலை புதைக்க முடியாமல் தவிப்பு

சாயல்குடி : முதுகுளத்தூர் பேரூராட்சி பொது மயானத்தில் குப்பை கழிவுகள், மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் இறந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 3 பொது மயானங்கள் உள்ளன. இங்குள்ள மயானம், எரிமேடை கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாததாலும், பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் செய்யாமல் இருப்பதால் கட்டிடங்களின் மேற்கூரை, தரைத்தளம் போன்றவை சேதமடைந்து கிடக்கிறது.

எரிமேடையில் இறந்த உடலை எரிக்க விறகு, டயர், மாட்டு சாணத்தின் எரு, தேங்காய் கொட்டாச்சிகள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாம்பல், கம்பி, கரி, எலும்பு போன்ற கழிவு பொருட்கள் தேங்கிக் கிடக்கிறது, இதனை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முன்வராததால் எரிமேடையிலேயே தேங்கி கிடக்கிறது. இறந்தவர் உடலை கொண்டு வரும் பொதுமக்களே துப்புரவு செய்யும் நிலை உள்ளது. குப்பைகள் நிறைந்து, அசுத்த பொருட்கள் குவிந்து கிடப்பதால் மயானத்தில் இறுதி சடங்குகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் மயானத்தில் இருக்கும் மொட்டை போடும் மண்டபம், எரிமேடைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலை போன்றவை சேதமடைந்து கிடக்கிறது. மயானங்களில் குப்பை கழிவுகள், உடைந்த பாட்டில் துகள்கள், கருவேல மரச்செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தற்போது பெய்த மழைக்கு மயானத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தண்ணீருடன், குப்பை, கழிவுகளும் நிறைந்து காணப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுவதுடன், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் இடம் தேடி அவதிப்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் மயானத்தில் தூர்வாரப்படாத உறை கிணறுகள், செயல்படாமல் கிடக்கும் அடிபம்புகளால் தண்ணீரின்றி, இறந்த உடலோடு தண்ணீர் குடங்களையும் சுமந்து செல்லும் அவலநிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே சேதமடைந்து கிடக்கும் மயானத்திலுள்ள கட்டிடங்களை சீரமைத்து, அடிப்படை வசதிகளை செய்துதர கலெக்டர் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rain cemetry , sayalkudi,cemetry ,heavy rain,thrash ,rubbish
× RELATED அயலகத் தமிழர் நலவாரியத்தில்...