×

பட்டிவீரன்பட்டி அருகே அரசு பள்ளியில் அவலம் வகுப்பறையில் மருத்துவ முகாம் கழிப்பறை அருகே மதிய உணவு

* மாணவர்கள் நிலை பார்த்து பெற்றோர் கண்ணீர்

பட்டிவீரன்பட்டி :  பட்டிவீரன்பட்டி அருகே அரசு பள்ளியில் மருத்துவ முகாம் நடத்த வகுப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் கழிப்பறை அருகே மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கேயே மதிய உணவும் சாப்பிட்டது பரிதாபத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்த வருகின்றனர். ஊரின் நடுவே இப்பள்ளி உள்ளதால் இட நெருக்கடியால் ஏற்கனவே மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 இந்நிலையில், பள்ளி வேலை நாளான நேற்று,  தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் இங்கு நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்க வந்திருந்தனர். முகாமிற்காக கொண்டு வந்த இசிஜி, ஸ்கேன் பரிசோதனை கருவிகள் வகுப்பறைகளில் வைக்கப்பட்டன. பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கும் தனித்தனியாக வகுப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறையின்றி திறந்தவெளியில் பள்ளி கழிப்பறை அருகே அமர வைக்கப்பட்டனர்.

மதிய உணவையும் அவர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். எங்கு உணவு அருந்துகிறோம் என உணர முடியாத வயதாக இருந்த மாணவ, மாணவிகள் அந்த துர்நாற்றத்திற்கிடையே உணவு சாப்பிட்டனர்.இதுகுறித்து முகாமிற்கு வந்த பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘ஏற்கனவே இப்பள்ளி போதிய இடவசதியின்றி உள்ளது. இங்கு மருத்துவ முகாம் நடத்தியதே தவறு, அதைவிட பள்ளி வேலை நாளில் முகாமை நடத்தி மாணவ, மாணவிகளை திறந்தவெளியில் கழிப்பறை அருகே அமரவைத்தது மிகப்பெரிய தவறு. கழிப்பறை அருகே அமர்ந்து மாணவர்கள் சாப்பிடும் காட்சி எங்கள் மனதை புண்படுத்துகிறது. மேலும், இம்முகாம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அருகில் இருந்தும் கூட்டமின்றி முகாம் வெறிச்சோடியே காணப்பட்டது’’ என்றனர்.

Tags : Lunch ,Government School ,toilet ,Medical Camp Toilet. ,Patti Veeranpatti , government school, lunch, bathroom,pattiveeranpatty
× RELATED சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்...