×

உற்பத்தி குறைவால் 20 சதவீதம் வரை விலை உயர்வு பட்டாசு விற்பனை... விறுவிறுப்பில்லை

சிவகாசி :  சிவகாசியில் போதிய உற்பத்தி இல்லாததால் பட்டாசுகளின் விலை இந்த ஆண்டு 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விலையேற்றம், புதிய ரகங்கள் இல்லாததால் கடந்தாண்டைப் போல விற்பனை இல்லை என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நமது நாட்டில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கிறது. அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் இருப்பதால், ஆண்டுக்காண்டு புதிய ரகங்களை அறிமுகம் செய்து வந்தனர். வெளிநாடுகளுக்கு இணையாக இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது.

இதேபோல, சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,200க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆடி மாதம் முதல் பட்டாசு விற்பனை தொடங்கும். பட்டாசு தொடர்பான வழக்கில் பசுமை பட்டாசு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்தது. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி, பட்டாசு ஆலைகள் 90 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமக ஆலைகளில் உற்பத்தி நடக்கவில்லை. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி தொடங்கியது.

இந்தாண்டு வடமாநிலங்களில் இருந்து அதிக ஆர்டர் வந்ததால் ஆரம்பத்தில் இருந்தே பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனிடையே, ஆலை வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். ஆர்டர்களுக்கு ஏற்ப பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், பட்டாசு விலையை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர்.

சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. வெளியூர் வாடிக்கையாளர்கள் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய ரக பட்டாசு உற்பத்தி இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், பட்டாசுகளின் விலையும் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சிவகாசி பட்டாசு கடை உரிமையாளர் முருகன் கூறுகையில், ‘‘சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்தாண்டு 3 மாதமாக உற்பத்தி பணி நடக்கவில்லை. தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பெருமளவில் வெளிமாநில வியாபாரிகள் வாங்கிச் சென்றுவிட்டனர்.

இதனால், சிவகாசியில் உள்ள கடைகள் மற்றும் வெளிமாவட்ட கடைகளுக்கு தேவையான அளவு பட்டாசுகள் அனுப்பப்படவில்லை. 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பட்டாசு விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்திவிட்டனர். பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவால், புதிய ரக பட்டாசுகளும் உற்பத்தி செய்யப்படவில்லை. விலையேற்றம், புதிய ரகம் இல்லாதது ஆகிய காரணங்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்தாண்டைப் போல விற்பனையில் விறுவிறுப்பு இல்லை’’ என்றார்.

Tags : sivakasi, cracker, decrease in production,increase in price
× RELATED ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக...