சாலைகள் மோசமாக இருந்தால் சென்னை சிங்கப்பூராக மாற 1000 ஆண்டுகள் ஆகும் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : மழைநீர் வடிகால் மற்றும் சாலைகளின் மோசமான பார்க்கும் போது சென்னை சிங்கப்பூராக மாற 1000 ஆண்டுகள் ஆகும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அப்போது 10 ஆயிரம் ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கி சென்று இருக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது  உயர்நீதிமன்றத்தில் வழக்கு


தொலைபேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, அவற்றை சீரமைக்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவர் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ,தொலை தொடர்பு நிறுவனங்களால் சேதப்படுத்தப்படும் சாலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் எனவே தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மோகன்ராஜ் வழக்குடன் மழைநீர் வடிகால், சாலை பராமரிப்பு வழக்கையும் சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு எடுத்தது.

2015ம் ஆண்டு போல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாது : சென்னை மாநகராட்சி

அதன்படி, இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.சத்யநாராயணன், என். ஷேஷசாயி அமர்வு முன்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மோசமான சாலைகளை கண்டறியவும் மழைநீர் வடிகால்களை ஆராயவும் 2 வழக்கறிஞர்களை ஆணையர்களாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நியமித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாது என சென்னை மாநகராட்சி உயர்நீதிதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. குறிப்பாக அந்த அறிக்கையில் 80% மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 சென்னை சிங்கப்பூராக மாற 1000 ஆண்டுகள் ஆகும்

இதை கேட்ட நீதிபதிகள், சென்னையில் இருந்து பெரும்பாலான சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டு அதிருப்தி அடைந்தனர். சாலைகள் மோசமாக இருந்தால் சென்னை சிங்கப்பூராக மாற 1000 ஆண்டுகள் ஆகும். ஆனால் அப்போது 10 ஆயிரம் ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கி சென்றுவிடும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கழிவுநீர் கால்வாய்களை சாலை நடுவே அமைக்காமல் சாலை ஓரங்களில் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முழுமையாக மழைநீர் வடிகால் அமைத்தவுடன் சேதமடைந்த சாலைகளை செப்பனிட்டு நவம்பர் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : roads ,Chennai ,Madras High Court. ,Singapore , Roads, Judges, Rainwater, Report, Rainwater
× RELATED மந்தகதியில் மேம்பாலப்பணிகள்...