×

திருவனந்தபுரத்தில் நள்ளிரவில் பரபரப்பு: பத்மநாபசுவாமி கோயில் அருகே பறந்த டிரோன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  பத்மநாபசுவாமி கோயில் அருகே நேற்று ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்தது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  அதிக பாதுகாப்பு மிகுந்த விமான நிலையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்,  சர்வதேச சுற்றுலாத்தலமான கோவளம், பத்மநாபசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்  ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது  செய்யப்படவில்லை. இந்த டிரோனை பறக்க விட்டது யார் என்பது குறித்தும்  போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பத்மநாபசுவாமி கோயில் அருகே ஒரு டிரோன் பறந்தது. இதை அங்கு   பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். அந்த டிரோன் வடக்கு  நடைக்கு அருகேயும், பின்னர் தெற்கு நடைக்கு அருகேயும் பறந்தது. இதையடுத்து,  போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சிறிது நேரத்தில் அந்த டிரோன் மாயமானது. இது  குறித்து உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். பத்மநாபசுவாமி கோயிலை சுற்றிலும் ஏராளமான ரகசிய  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், டிரோன் பதிவாகி  உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Trivandrum ,Padmanabhaswamy temple ,Thiruvananthapuram ,Drone flies , Thiruvananthapuram, Padmanabhaswamy Temple, Drone
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...