×

உடல் நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டர் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண் துணை கமிஷனர்: சமூக வலை தளங்களில் வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு

சென்னை: இன்ஸ்பெக்டரின் சடலத்தை பெண் துணை கமிஷனர் சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன. வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஸ்ரீதேவி. கடந்த 6 மாதமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 10ம் தேதி திடீரென உயிரிழந்தார். 11ம் தேதி இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது போலீஸ் மரியாதையும் வழங்கப்பட்டது. போலீசார் துப்பாக்கியால் வாணத்தை நோக்கி சுட்டு அணிவகுப்பு நடத்தினர். பின்னர், அவரது உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல தயாரானபோது, தேவியின் உறவினர்கள் குறைவானவர்களே இருந்துள்ளனர்.

அதிலும் பெண்கள்தான் இருந்துள்ளனர். இதனால், உடலை யார் சுமந்து செல்வது என்று உறவினர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று துணை கமிஷனர் சுப்புலட்சுமி, இறந்த இன்ஸ்பெக்டர் சடலத்தை தூக்க ஆரம்பித்தார். அவரை பார்த்து மற்ற பெண் போலீசார் தூக்கினர். பின்னர், அவர்களே சுடுகாடுவரை உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் வரை இருந்தனர். பெண் இன்ஸ்பெக்டரின் உடலை, பெண் துணை கமிஷனர் தூக்கிக் கொண்டு சென்றது தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி, துணை கமிஷனருக்கு இணைய தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags : Woman deputy commissioner ,body inspector ,Inspector , Health Inspector, Inspector, Corpse, Female Deputy Commissioner
× RELATED பெண்ணிடம் வழிப்பறி