×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட மொத்தம் 14 பேர் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.   கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமீபத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்தை நேற்று முன்தினம் அமலாக்கத ்துறை கைது செய்தது. நேற்று முன்தினம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதையடுத்து, ப.சிதம்பரத்தை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர். அவர் மீண்டும் வரும் 24ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  அதில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் சிந்து குல்லர், பீட்டர் முகர்ஜி, ஆடிட்டர் பாஸ்கர ராமன், பிரபோத் சக்ஸ்சேனா உட்பட மொத்தம் 14 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  இதில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறிவிட்டதால் அவர் அரசு தரப்பு சாட்சியமாக கருதப்படுவார். சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, வரும் திங்கள்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நடைபெறும் என்று தெரிகிறது.

பெயர் வெளியிடப்படாத நபர் முக்கிய வாக்குமூலம்:
சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘சிதம்பரம் வெளியில் இருந்தபோது, இந்த வழக்கில் அனைத்து விவரங்களையும் அறிந்த ஒருவரை மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அந்த நபர் குற்றவியல் நடைமுறை விதிகள் 164வது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலம் தான் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மிக முக்கியமான சாட்சியம். அந்த நபர் இந்திராணியோ அல்லது பீட்டர் முக்ரஜியோ அல்ல. அவரது அடையாளத்தை குற்றப்பத்திரிக்கையில் கூட தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவர் வெளியே சென்றால் சாட்சியங்களை கலைத்து விடுவார்,’’ என வாதிட்டார்.

ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவரை தாராளமாக தண்டியுங்கள். மேலும், வழக்கையும் விசாரிக்கவே தேவையில்லை. ஆனால், இதுவரை ஆதாரத்தை வெளியில் காட்டாமல் சிபிஐ வெறும் வாய் வார்த்தைகளால் மட்டும் தெரிவித்து வருவதைதான் எங்களால் ஏற்க முடியவில்லை. ப.சிதம்பரம் சமுதாயத்தில் மிகப்பெரிய மனிதர் என்பதால் கண்டிப்பாக வெளிநாடு தப்பித்து செல்ல மாட்டார். அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்,’’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

‘5 கிலோ குறைந்து விட்டார்’
தனது வாதத்தில் கபில்சிபல் கூறுகையில், ‘‘சிறைக்கு செல்வதற்கு முன்பாக இருந்த எடையை விட தற்போது சிதம்பரம் 5 கிலோ குறைந்து விட்டார். மேலும், கொசுக்கடியால் அவருக்கு டெங்கு போன்ற காய்ச்சல் வரவும் வாய்ப்புள்ளது. அவர் மிகவும் சோர்ந்து போயுள்ளார்,’’ என்றார்.

Tags : persons ,Chidambaram ,Karthi Chidambaram , INX Media Abuse, PC Chidambaram, Karthi Chidambaram, Charge Sheet
× RELATED எஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக...