×

மே.வங்க எல்லையில் இந்திய வீரர் சுட்டுக்கொலை வங்கதேச வீரர்களை நோக்கி ஒரு குண்டு கூட சுடவில்லை: எல்லை பாதுகாப்பு படை குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘எல்லை பாதுகாப்பு படையினர் ஒரு குண்டு கூட சுடவில்லை, ஆனால், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய வீரர் பலியானார்,’ என எல்லை பாதுகாப்பு படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்  மேற்கு வங்கம் முர்சிதாபாத் மாவட்டத்தில் இந்தியா-வங்கதேசம் இடையே பத்மா நதி ஓடுகிறது. வங்கதேச எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 3 பேரை வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர், அவர்களில் 2 பேரை மட்டும் திருப்பி அனுப்பி, இந்திய எல்லை பாதுகாப்பு படையினரை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர், விரைவு படகில் சென்றுள்ளனர். இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய வீரர்களை வங்கதேச வீரர்கள் திடீரென சுற்றிவளைத்து சுட்டதில், இந்திய வீரர் விஜய் பான் சிங் (51) பலியானார். மற்றொரு வீரர் குண்டு காயம் அடைந்தார். இது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வங்கதேச படையினர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததால், இந்திய வீரர்கள் வங்கதேச எல்லைக்குள் சென்றனர். அப்போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் ஒரு குண்டு கூட சுடவில்லை. ஆனால், வங்கதேச எல்லைப்படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்,’’ என்றார்.

‘தற்காப்புக்காக சுட்டோம்’:
வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கதேச எல்லையில் மீன்பிடித்த 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் தப்பினர். அதன்பின் இந்திய மீனவரை மீட்க, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வங்கதேச எல்லைக்குள் படகில் நுழைந்தனர். இதுவும் அத்துமீறல் என்பதால், வழக்கத்தில் உள்ள நடைமுறைப்படி, உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின் மீனவரையும், உங்களையும் ஒப்படைப்போம் என இந்திய வீரர்களிடம் தெரிவித்தோம். இதனால் ஆவேசம் அடைந்த இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு இந்திய பகுதிக்குள் திரும்பினர். வங்கதேச எல்லைப் படையினரும் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர்,’ என கூறியுள்ளது.

Tags : soldier ,Bangladesh ,Indian ,border , West Bengal border, Indian soldier, shot dead, Bangladeshi soldiers, border security force
× RELATED காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில்...