×

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம்இங்கி. எம்பிக்கள் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு

பிரசெல்ஸ்: இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய பிரக்சிட் ஒப்பந்தம் தயாராகி உள்ளது. இதற்கும் இங்கிலாந்து எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரக்சிட் ஒப்பந்தம் முடிவாவதில் கடும் சிக்கல் வருகிறது. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரக்சிட் ஒப்பந்தம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 3 முறையும் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சனாலும் பிரக்சிட் ஒப்பந்தத்தில் எம்பிக்களின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய பிரக்சிட் ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற்றுள்ளார்.

முந்தைய ஒப்பந்தத்தில் இருந்து சில மாற்றங்களுடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி தந்துள்ளது. வரும் 31ம் தேதியுடன் பிரக்சிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளதால், இன்று இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி, புதிய ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அனைத்து எம்பிக்களும் ஒத்துழைப்பு தர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜியன் கிளாட் ஜங்கர் வலியுறுத்தி உள்ளார். ஆனால், புதிய ஒப்பந்தத்திற்கும் இங்கிலாந்து எம்பிக்கள் எதிர்ப்பையே தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என வெளிப்படையாக கூறியிருப்பது பிரதமர் ஜான்சனுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய வாக்கெடுப்பில் புதிய பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், 3வது முறையாக பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க இங்கிலாந்து அனுமதி கோர வேண்டியிருக்கும். இது இப்பிரச்னையை கடும் சிக்கலாக்கி விடும் என்றும், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய  கூட்டமைப்பு தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் ஜங்கர் எச்சரித்துள்ளார்.

Tags : Brexit ,Opposition ,EU ,MPs ,Parliament ,New Brexit , European, UK, Brexit deal, parliament, referendum
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்