×

குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தால் வெளிநாடாக இருந்தாலும்கவலைப்பட மாட்டேன்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்

வாஷிங்டன்: ‘’மத்திய அரசின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தால், அது வெளிநாடாக இருந்தாலும் கவலைப்பட மாட்டேன்,’’ என்று காங்கிரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரின் காலக்கட்டமே இந்திய வங்கித்துறையின் மோசமான நேரம்,’ என குற்றம்சாட்டி இருந்தார். ‘குற்றச்சாட்டுகளை கூறுவதை விட்டு, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகளை காண வேண்டும்’ என்று மன்மோகன் சிங் அறிவுரை கூறியிருந்தார்.
இந்நிலையில்,  வாஷிங்டனில் நேற்று நடந்த சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். கூட்டத்திற்குப் பின், அவர் அளித்த பேட்டி: பழி சுமத்துவதில் எந்த பலனும் இல்லை என மன்மோகன் சிங் கூறுவதை நான் மதிக்கிறேன்.

ஆனால், முந்தைய காலகட்டத்தில் எப்போது, என்ன நடந்தது என்பதை பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாயிற்றே. ரகுராம் ராஜனின் கருத்து பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குதான் நான் இந்த பதிலை அளித்தேன். அதே நேரம், அரசு மீது குற்றம்சாட்டப்படும் போது, அதற்கான பதிலை கூற சில எல்லையை மீற வேண்டுமென்றால், அது வெளிநாடாக இருந்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன். சர்வதேச நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுமொத்த உலக பொருளாதார வளர்ச்சியையும் குறைத்தே மதிப்பிட்டுள்ளது. அதேபோல், இந்தியாவின் வளர்ச்சியையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.  இப்போதும் கூட நம் நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியுடனேயே இருக்கிறது. பொருளாதாரத்தை மேலும் வேகமான வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல, அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. எந்தெந்த துறைக்கு என்னென்ன தேவையோஅதை செய்து தரவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

‘அபிஜித்தின் யோசனைகள் கம்யூ. கொள்கை’:
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, நாட்டின் பொருளாதாரம் கடும் சிக்கலில் இருப்பதாக குற்றம்சாட்டினார். அவரை விமர்சித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அபிஜித்தின் யோசனைகள் இடதுசாரி கொள்கையை கொண்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். காங்கிரசின் ‘நியாய்’ திட்டத்திற்கு அவர் ஆதரவு அளித்தார். ஆனால், மக்கள் அவரது திட்டத்தை நிராகரித்து விட்டனர்,’’ என்றார்

Tags : Nirmala Sitharaman , Nirmala Sitharaman, Central Government
× RELATED நிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய...