அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறைக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதியம் கோர உரிமை இல்லை : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 30ம் தேதி பொது விடுமுறை அறிவித்து, தமிழக அரசு மாற்று முறை ஆவண சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை (பி மெட்டல் பியரிங்க்ஸ்) தங்கள் தொழிற்சாலையில் முதல் ஷிப்ட் மற்றும் பொது ஷிப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. மதியம் மற்றும் இரவு நேர ஷிப்ட்களில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கும் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த நிர்வாகம், 30ம் தேதி  விடுமுறை அறிவிப்பதாக இருந்தால் விடுமுறை தினமான ஆகஸ்ட் 8ம் தேதி பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் ஜூலை 30ம் தேதி பணிக்கு வராததால் அன்றைய தினம் அவர்களுக்கு ஊதியம் வழக்கப்படவில்லை.

இதை எதிர்த்து தொழிற்சங்கம், சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 47  ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார். மனுதாரர் நிறுவனம் நிபந்தனையுடன்  விடுமுறை அளிக்க முன் வந்தபோதும் அதை ஏற்காத ஊழியர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியம் பெற உரிமையில்லை எனக்கூறி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : company ,government ,holiday ,High Court , Private company employees , entitled to pay ,special holiday declared ,government
× RELATED அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க...