×

டாஸ்மாக் கடைகள் தூய்மையாக இருக்க வேண்டும் : ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் டெங்கு உள்ளிட்ட வைரல் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், டாஸ்மாக் கடைகள் மற்றும் அவை அமைந்திருக்கும் பகுதிகள் அசுத்தமாக உள்ளதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. மேலும், மழை காலங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அருகிலே மழை நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுத்து வருகிறது. எனவே, இதை தடுக்க டாஸ்மாக் கடைகள் மற்றும் அவை அமைந்திருக்கும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் மதுபானங்களை பயன்படுத்திவிட்டு அதை கடைகளுக்கு அருகிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதேபோல், கடைகளுக்கு வரும் மதுபானங்கள் அட்டைப்பெட்டிகளில் வருகிறது. எனவே, கடைகளுக்கு அருகில்  காலிமதுபான பாட்டில்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் அதிக அளவில் குவிக்கப்படுகிறது. மழை காலத்தில் கடைகளுக்கு அருகில் மழைநீர் தேங்கி நோய்த்தொற்றுக்கும் வழி வகுத்து வருகிறது. இதுகுறித்து தொடர்புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தது. எனவே, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


Tags : Task shops ,shops ,Tasmac , Tasmac shops, be clean, management advice,employees
× RELATED நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!!