×

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விடுதிகளை முறையாக பராமரிக்க கோரி வழக்கு : தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை முறையாக  சுகாதாரமான முறையில் பராமரிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், தமிழகத்தில் 1,324 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 24 மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் 3 விடுதிகள் வாடகை கட்டிடங்களிலும், 21 விடுதிகள் சொந்த கட்டிடங்களிலும் இயங்குகின்றன. இந்த விடுதிகளை முறையாக, சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை. இதனால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தங்கி, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தேன். தற்போது இந்த விடுதியில் அடிப்படை வசதியும் இல்லை. சுகாதாரமான முறையில் விடுதி பராமரிக்கப்படுவதில்லை. பட்டியலின மக்கள் நலனுக்காக மத்திய அரசு, 2018-19ம் ஆண்டில் ரூ.47.99 கோடி ஒதுக்கியது. அதில் சிறிதளவு கூட தமிழக அரசு இந்த மாணவர்களுக்காக செலவு செய்யவில்லை. தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனுக்காக கொண்டு வரும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதிகளை முறையாக பராமரித்து உரிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நவம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : SC ,SD ,hostels ,Govt. Hostels ,Tamil Nadu , SC, ST students sue , proper maintenance, hostels
× RELATED நாட்டின் ரகசியம் சார்ந்த பிரச்னைகளை...