×

திருவண்ணாமலையில் 10,000 சிசுக்களை அழித்தவர் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 10 ஆயிரம் சிசுக்களை கருவில் அழித்த புகாரில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த போலி பெண் டாக்டர் ஆனந்தியை, நேற்று போலீசார் மீண்டும் கைது செய்தனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் சொகுசு பங்களா வீட்டில் கருக்கலைப்பு மையம் நடத்தியவர் போலி பெண் டாக்டர் ஆனந்தி(51). இவர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பிளஸ்2 தேர்ச்சி பெறாத ஆனந்தி, 10 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும், ஏற்கனவே 3 முறை கைதாகியும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும், அப்போது தெரியவந்தது. அவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், வீட்டுவசதி வாரியத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்த அவரது கணவர் தமிழ்ச்செல்வன், பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான ஆனந்தி, வெளி மாவட்டங்களுக்கு சென்று கருக்கலைப்பில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தங்கி கருக்கலைப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் விரைந்தனர். அங்கிருந்து தப்பி திருவண்ணாமலைக்கு வந்ததை போலீசார் அறிந்தனர். இதைடுத்து, வேங்கிக்கால் பகுதியில் நேற்று ஆனந்தியை போலீசார் கைது செய்தனர்.


Tags : Doctor ,babies ,Thiruvannamalai , Doctor who aborted ,10,000 babies ,Thiruvannamalai arrested
× RELATED பூசணி விதையின் பயன்கள்!