×

ஆரோவில் சர்வதேச நகரில் பரபரப்பு மனைவி, மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை : கடன் பிரச்னையால் விபரீத முடிவு

வானூர்: கடன் பிரச்னையால் மனைவி, 2 மகள்களை கொலை செய்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக  போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர் ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள சோலார் கிச்சனில் 18 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள்கள் கிருத்திகா (17), சனிதா (13). ஆரோவில் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2, 8ம் வகுப்பும் படித்து வந்தனர். மகேஸ்வரி ஆரோவில் கிச்சனில் வேலை செய்து வந்ததால் ஆரோ மாடல் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். சுந்தரமூர்த்தி மாதாந்திர ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் 30 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தேவை அதிகரித்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டை உடைத்து, திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்கியும் மகேஸ்வரி, கிருத்திகா, சனிதா ஆகிய 3 பேரும் படுத்த நிலையிலும் இறந்து கிடந்தனர். 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு பிரச்னையில் 30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. பண்டிகை வர இருப்பதால், பணம் கட்டியவர்களுக்கு பொருட்களை தர பணம் இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள சுந்தரமூர்த்தி முடிவெடுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று உணவில் சுந்தரமூர்த்தி விஷம் கலந்து மனைவி, இரு மகள்களிடம் கொடுத்துள்ளார். இதனை 3 பேரும் சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டனர். இதன்பின்னர் சுந்தரமூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Suicide worker ,Auroville International City Worker ,daughters ,suicide , Worker commits suicide , killing wife, daughters
× RELATED சென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால்...