×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது : வெளியாட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.அதேபோன்று நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி  ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு தொகுதியிலும் கடந்த சில நாட்கள் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் செய்தனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. வெளியாட்கள் அனைவரும் அந்த தொகுதியில் இருந்து இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு தொகுதியில் தேர்தல் முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதியில்  275 வாக்குச்சாவடி மையங்களில் 50 மையங்கள் பதட்டமானவையாகும். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடி மையங்களில் 110 மையங்கள் பதட்டமானவை ஆகும். பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புகள் செய்யப்படும். வாக்குப்பதிவு முழுவதும் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். 2 தொகுதிகளுக்கும் 6 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகும். இறுதி கட்ட பயிற்சி நாளை காலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : constituency ,Vikravandi ,Nankuneri ,outsiders ,Election Commission , Presentation at Vikravandi, Nankuneri constituency , 6 pm
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி...