×

திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவுக்கு 2500 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா, வரும் டிசம்பர் 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 10ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் காத்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. எஸ்பி சிபிசக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, குணசேகரன், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தீபத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து துறைவாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார். சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: கார்த்திகை தீபத்திருவிழாவை தரிசிக்க வழக்கம் போல இந்த ஆண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தியிருக்கிறோம். இந்தாண்டு பருவமழை தீவிரமாக இருக்கும் நாட்களில் தீபத்திருவிழா அமைந்திருக்கிறது. எனவே, தகுந்த முன்னேற்பாடுகளை விரிவாக செய்ய திட்டமிட்டுள்ளோம். 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கவும், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நகருக்கு வந்து செல்ல வசதியாக இணைப்பு பஸ்களை அதிகம் இயக்கவும் கவனம் செலுத்தப்படும். அதேபோல், சிறப்பு ரயில்களை பக்தர்களுக்கு பயனுள்ள நேரத்தில் இயக்க ஏற்பாடு செய்யப்படும். தீபத்திருவிழாவின் போது மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதற்கான அனுமதி அட்டையை பெற்று செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கற்பூரம் ஏற்ற அனுமதிக்கப்படும்.

அண்ணாமலையார் கோயிலுக்குள் பரணி தீபத்தின் போது 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்தின் போது 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். இட வசதிக்கு ஏற்ப, வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை கூடுதல் எண்ணிக்கையில் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம். வழக்கம் போல, கட்டண தரிசன டிக்கெட்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Thiruvannamalai Thiruvannamalai , Thiruvannamalai
× RELATED கொரோனா தொற்று குறைந்தவுடன் பஸ்...