×

விழுப்புரம் அருகே பரிதாபம்: மனைவி, 2 மகள்களை கொன்று குடும்பத் தலைவர் தற்கொலை

வானூர்: பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்ைத சேர்ந்த 4 பேர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். கடன் பிரச்னையால் மனைவி, 2 மகள்களை கொன்று குடும்பத் தலைவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர் ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள சோலார் கிச்சனில் 18 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள்கள் கிருத்திகா (17), சனிதா (13). ஆரோவில் பகுதியில் உள்ள பள்ளியில் கிருத்திகா 12ம் வகுப்பும், சனிதா 8ம் வகுப்பும் படித்து வந்தனர். மகேஸ்வரி ஆரோவில் கிச்சனில் வேலை செய்து வந்ததால் ஆரோ மாடல் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு ஆகியவற்றை சுந்தரமூர்த்தி நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்களை தர வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், அவருக்கு ரூ.30 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த திங்கட்கிழமை சுந்தரமூர்த்தி குயிலாப்பாளையத்தில் உள்ள தனது தாய், தந்தையை சந்தித்துள்ளார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினர் யாரும் வெளியில் நடமாடவில்லை. அவர்கள் வெளியூர் சென்றிருக்கலாம் என ஆரோ மாடல் குடியிருப்புவாசிகள் நினைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டை உடைத்து, திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையிலும் மகேஸ்வரி, அவரது மகள்கள் கிருத்திகா, சனிதா ஆகிய 3 பேரும் படுத்த நிலையிலும் இறந்து கிடந்தனர். அவர்களது உடல்கள் அழுகி கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து 4 பேரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு பிரச்னையில் ரூ.30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க முடியாமல் சுந்தரமூர்த்தி பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வர இருப்பதால், உடனடியாக பணம் கட்டியவர்களுக்கு பொருட்களை தர வேண்டும். இதற்கும் பணம் இல்லை. இதனால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள சுந்தரமூர்த்தி முடிவெடுத்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று வௌியில் இருந்து வாங்கி வந்த உணவில் சுந்தரமூர்த்தி விஷம் கலந்து மனைவி, இரு மகள்களிடம் கொடுத்துள்ளார். இதனை இவர்கள் மூவரும் சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டனர். இதன் பின்னர் சுந்தரமூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழு விவரம் தெரியவரும். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்து கிடந்த சம்பவம் ஆரோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Family leader ,Villupuram ,daughters , Suicide
× RELATED மனைவி மாயமானதால் விரக்தி குடிநீர்...