×

உத்திரமேரூர் அருகே சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழங்கால கோயில்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பஜார் வீதியில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வைகுண்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலை சுற்றிலும், மன்னர்களின் ஆட்சி முறைகள், பழங்கால தேர்தல் நடைமுறைகள் உள்ளிட்டவைகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. உலகிற்கே தேர்தல் முறையினை எடுத்துறைத்தது இந்த கல்வெட்டுதான்.

இதே போல் திருப்புலிவனம் வியாக்கிரபுரீஸ்வரர் ஆலயம், திருமுக்கூடலில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், பெருநகரில் வரதராஜ பெருமாள் கோயில், மானாம்பதியில் வனசுந்தரேஸ்வரர் கோயில் என ஏராளமான கோயில்கள் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவை. இவைகளில் பெரும்பாலான கோயில்கள் அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலும், சில கோயில்கள், பரம்பரை தர்மகர்தா, கிராம மக்கள், கோயில் நிர்வாகிகள் என பலராலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் சிதிலமடைந்து புதர்மண்டியாக காட்சியளிக்கிறது. தற்போது கருவறை மட்டுமே உள்ள இந்த கோயிலில் மேல்தளம் முதல் சுற்று சுவர் வரை அனைத்தும் இடிந்த நிலையில் உள்ளது. இதனால் கல் சுவர்களில் சில பாகங்கள், கல்தூண் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. கல்தூண்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சில கற்சிலைகள் சமூக விரோதிகளால்  உடைக்கப்பட்டுள்ளது. கல்தூணால் ஆன கொடி மரம் உடைந்து கிடக்கிறது.

இக்கோயிலின் அருகே மதுபிரியர்கள் ஜாலியாக அமர்ந்து மது அருந்தி, பாராக மாற்றி பயன்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் குடித்து விட்டு வீசும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு இது போன்ற புராதானமான கோயில்களை சீரமைத்து காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uttiramerur , Uttiramerur
× RELATED உத்திரமேரூரில் ஒரே நாளில் 2,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி