×

உலக தமிழ் சங்கத்திற்கு வருகிறது கீழடி அகழாய்வு பொருட்கள்

*அருங்காட்சியகம் அமைய வாய்ப்பு

மதுரை: கீழடி அகழாய்வு பொருட்கள் உலக தமிழ் சங்கத்திற்கு வருவதால், இங்கு அருங்காட்சியகம் அமைய வாய்ப்பு உருவாகி உள்ளது. உலக தமிழ் சங்க கட்டிடம்  மதுரை தல்லாகுளம் கண்மாயில் 14 ஏக்கர் பரப்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு, 2016ல் திறக்கப்பட்டது. அதில் கருத்தரங்கம் நடைபெறும் 2 அரங்கங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைந்துள்ளன. 4 ஆண்டுகளாகியும் தமிழ் சங்கம் முழு வடிவம் பெற முடியாமலும், செயல்பாடு மங்கியும் வெறிச்சோடி கிடக்கிறது.

தமிழ் கலை, கலாச்சாரங்களை வளர்க்கும் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் உலக தமிழ் சங்கத்தில் நடத்தி உலகுக்கு பறைசாற்றப்படும் என்று அறிவித்து 3 ஆண்டுகளாகியும் எதுவும் நடைபெறவில்லை.  எப்போதாவது பெயரளவில் சிறிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தி, கோப்புகளில் பதிவு செய்யப்படுகின்றன. இது தவிர அங்குள்ள ஏசி வசதி செய்யப்பட்ட அரங்கில் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.   தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வுகளும் இல்லை, ஆராய்ச்சி ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் எதுவும் சேகரிக்கப்படாமல் அதற்காக உருவாக்கிய தனி அறைகள் மூடியே கிடக்கின்றன. ஒரு பிரமாண்ட கட்டிடம் உருவாகியும் அதன் நோக்கம் நிறைவேறாமல் உருக்குலைவதாக தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் வேதனைபட்டு வந்தனர்.

 இந்த சூழலில் தற்போது சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி தமிழர் நாகரீகம் 2,600 ஆண்டுகள் தொன்மையானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை சீசன் என்பதால், அடுத்த கட்ட அகழாய்வு ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அகழாய்வு மூலம் தோண்டி எடுக்கப்பட்டதொன்மையான ஆயிரக்கணக்கான பொருட்களை கீழடியில் பாதுகாப்புடன் வைத்திருக்க போதிய வசதிகள் இல்லை.

எனவே இந்த பொருட்களை மதுரையில் திருமலைநாயக்கர் மகாலில் வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டு, உலக தமிழ் சங்க கட்டிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த கட்டிடத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி முதல் இங்கு பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் கீழடி அகழாய்வு பொருட்களை பொது மக்கள் பார்வையிடும் வகையில் உலக தமிழ் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.  

 இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறும்போது, “தமிழர் நாகரீக தாய்மடியாக கருதப்படும் கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை தமிழின் தலைநகரமாக புகழப்படும் மதுரையில் அமைந்துள்ள உலக தமிழ் சங்கத்தில் வைப்பது வரவேற்க தக்கது, இது குறித்த ஆராய்ச்சிகளை தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் நடத்துவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு, உலக கவனத்தை ஈர்க்க வழி ஏற்படும். இது உலக தமிழ் சங்க வளர்ச்சிக்கும் பயனளிக்கும்” என்றனர்.

பெங்களூரு சென்ற பொருட்கள் மதுரை வருமா?

கீழடியில் மத்திய தொல்லியில் துறை சார்பில் 2015ல் அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட பொருட்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Tags : World ,TNA ,Keeladi Cultivation Things Will Be Going To Madurai World Tamil Association , World Tamil Association,Madurai,Keeladi Museum, Keeladi
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...