×

2020 பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்: FATF எச்சரிக்கை

பாரிஸ்: உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இன் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் தற்போது தப்பித்துள்ளது. மேலும், FATF அமைப்பு விதித்த 27 இலக்குகளில் பாகிஸ்தான் வெறும் 5 இலக்குகள் மட்டுமே நிறைவேற்றியதால் கிரே பட்டியலில் மீண்டும் இடம்பிடித்துள்ளது. 2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிகெடு விதித்துள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் (APG) பிரிவு நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே, இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றும் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய - பசிபிக் குழுமம் (APG) நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை கட்டுபடுத்தவதும் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் வரை இந்த நடவடிக்கை எடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

மேலும் அக்டோபர் மாதம் வரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த APG அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பொறுப்பான லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்துவதில் வழங்கப்பட்ட 27 இலக்குகளில் ஐந்து மட்டுமே பாகிஸ்தானால் தீர்க்க முடிந்தது. எனவே, பாகிஸ்தான் நாட்டை க்ரே (grey) பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளது.

மேலும், அடுத்த 4 மாதங்களுக்குள் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தாவிடில் பாகிஸ்தான் நாட்டை கருப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் 2020ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் நிதி மோசடியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் சர்வதேச நிதி அமைப்பான FATF- இடம் இருந்து நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pakistan ,FATF , Pakistan, Black List, FATF, Terrorist Financing, Financial Action Task Force, Warning
× RELATED பாகிஸ்தான் பயணம் ரத்து