×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவரை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ கைது செய்தது. பின்னர், அவரை டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்று முறை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் தற்போது திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பணப்பரிவர்த்தனை தொடர்பாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.  அந்த மனு மீதான விசாரணையில் “ஐஎன்எக்ஸ் மீடியா  முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க எந்த தடையும் கிடையாது. மேலும், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் அவரை  கைது செய்தும் விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த வழக்கில், சிபிஐ இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என ப.சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மதியம் தொடங்கிய விசாரணையில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Karthik Chidambaram ,CBI ,INX Media ,Chidambaram , CBI, charge sheet, filing, INX Media, PC Chidambaram, Karthik Chidambaram
× RELATED தேர்தல் பத்திரம் ஊழல் விசாரிக்க தனி...