×

பெரம்பலூர் அருகே புள்ளி மானை வேட்டையாடிய 2 பேர் கைது, 4 பேருக்கு வனத்துறையினர் வலை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் திருமந்துறை அருகே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான மான்கள் உள்ளன. அங்கு சிலர் நாயை கொண்டு மானை வேட்டையாடி வருவதாக பெரம்பலூர் சரக்கு வன அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் சம்பந்தப்பட்ட வனப்பகுதிக்குள் வனப்பாதுகாவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் 5 வயதுடைய அழகிய ஆண் புள்ளி மானை நாய்களை வைத்து துரத்தி பிடித்து, அவற்றின் தலையை துண்டித்து விட்டு உடலை மட்டும் ஆட்டோவில் கொண்டு செல்வதை பார்த்துள்ளனர். இந்நிலையில் அவர்களை விரட்டி மடக்கிய போது 4 பேர் தப்பியோடினர்.

மற்ற இருவரை கைது செய்த வனத்துறையினர் தலைதுண்டிக்கப்பட்ட மானின் உடலையும் மீட்டனர். இதை தொடர்ந்து, புதுநடுவல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், பாலமுருகன் என்ற அந்த இருவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நாய்களை வைத்து மான்களை வேட்டையாடி அதன் தலையை கொடூரமாக வெட்டி வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இந்த மான் வேட்டை கும்பல் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஏராளமான மான்களை வேட்டையாடி மாமிசத்தை விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது.

Tags : persons ,Perambalur Perambalur ,hunting deer , Perambalur, point deer, hunting, 2 arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...