×

தமிழ்நாட்டில் மத்திய அரசு என்ன செய்தாலும் எடப்பாடி எதிர்த்து கேட்பதில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுச்சேரி: தமிழகத்தில் மத்திய அரசு என்ன செய்தாலும் எடப்பாடி அரசு எதிர்த்து கேட்பதில்லை என்று புதுவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். புதுச்சேரி  காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  ஜான்குமாரை ஆதரித்து, திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் ேநற்று மாலை தென்றல் நகர், ரெயின்போ  நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர்  பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு போதாத காலம். அங்கு ஒரு அடிமை   முதல்வராக இருக்கிறார். ஆனால், புதுச்சேரிக்கு புரட்சி முதல்வர்  கிடைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் நேரடியாக பாஜக ஆட்சி நடக்கிறது.  புதுச்சேரியில் பாஜகவால் நேரடியாக ஆட்சி செய்ய முடியாவிட்டாலும், கவர்னர்  கிரண்பேடி மூலம் ஆட்சி  செய்ய துடிக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா,  ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். அவர்  கூறியதுபோல் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு அமைந்திருக்கிறது. முதல்வர்  நாராயணசாமி பல திட்டங்களை அறிவித்து அவற்றை  நிறைவேற்ற துடிக்கிறார். ஆனால்,  கிரண்பேடி தடைக்கல்லாக நிற்கிறார். இலவச அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட பல  திட்டங்களை தடுத்து நிறுத்தி அயோக்கியத்தனம் செய்கிறார்.   ரங்கசாமியை பற்றி  ஒரே வார்த்தை சொல்ல வேண்டும்  என்றால் அவர் ஒரு துரோகி. இதை நான்  சொல்லவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னார். 2011ல்  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு  அதிமுகவை கழற்றிவிட்டார். இதனால்  கொதிப்படைந்த ஜெயலலிதா, ரங்கசாமி கூட்டணி  தர்மத்தை குழி ேதாண்டி புதைத்தவர். புதுச்சேரி மாநிலத்தையும் புதை குழியில்  தள்ளிவிட்டதாக கூறினார். அதுமட்டுமா புதுச்சேரி மக்களுக்கும் நம்பிக்கை  துரோகம் இழைத்தவர்,   ரங்கசாமியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என  ஜெயலலிதா ஆவேசமாக கூறினார்.

இத்தகைய ரங்கசாமிக்கு புதுவை மக்கள்  வாக்களிக்க மாட்டார்கள். இதனை அதிமுக தொண்டர்களுக்காகத்தான் சொல்கிறேன்.  அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். பாஜகவை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது,  அதேபோல்  ரங்கசாமியையும்  பிடிக்காது. இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி  அமைத்துள்ளனர்.  ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு என்ன செய்தாலும் பழனிசாமி அரசு எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அவர்களுக்கு ஆட்சி முக்கியம். இந்த ஆட்சி இல்லையென்றால்  நாளைக்கே சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி அறிக்கை தயார் செய்து வைத்திருக்கின்றனர். அதனால்தான் மோடி காலில் விழுந்து ஆட்சியை காப்பாற்றி கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில்பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் பேனர் வைக்கக்  கூடாது என்று கட்டளையிட்டதோடு, தமிழகத்தில் இளம்பெண் இறந்ததற்கு புதுவை  முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவிக்கிறார். ஆனால்,  தமிழக முதல்வர் இரங்கல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிரதமர் மற்றும் சீன அதிபர்  மாமல்லபுரத்துக்கு வந்ததற்கு பேனர் வைக்க வைக்க அனுமதி  கேட்டு நீதிமன்றம்  சென்றனர். இது வெட்க கேடான செயல். ஒரு முதல்வர் எப்படி  இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி  பழனிச்சாமி உதாரணமாக இருக்கிறார். எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு  நாராயணசாமி உதாரணமாக இருக்கிறார்.  இவ்வாறு அவர் பேசினார்.

103 ஊராட்சி செயலாளர்களிடம் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி தொகுதியில் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அந்தந்த ஊராட்சி செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது,  தேர்தல் பணிகள் குறித்தும், வெற்றி நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்தார். இடைத்தேர்தல் வெற்றிவாய்ப்புதான் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். எனவே முழுஅர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என  அறிவுறுத்தினார். திமுக தலைவரே நேரடியாக பேசியதால் ஊராட்சி செயலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தேர்தல்பணிகளில் வேகத்தை காட்டத் தொடங்கியுள்ளனர்.

Tags : Central Government ,Tamil Nadu ,government ,MK Stalin , Tamil Nadu, Central Government, Edappadi, MK Stalin
× RELATED தமிழகத்துக்கு மத்திய அரசின் விருதுகள்