×

நாட்டில் 3ல் ஒருவருக்கு வேலைவாய்ப்பு இல்லை: மன்மோகன் சிங் சரமாரி புகார்

மும்பை: நாட்டில் 3ல் ஒருவர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், மத்திய அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ் சாட்டுவதிலேயே குறியாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்  நேற்று மும்பையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் தற்கொலை, பொருளாதார மந்தநிலை, மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அரசு கண்டு கொள்ளாதது போன்ற விஷயங்களில்  மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. மத்திய  மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் மக்கள் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கின்றன.

நாட்டில் 3ல் ஒருவர் வேலை யில்லாமல் இருக்கும் நிலையில், மத்திய அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ் சாட்டு வதிலேயே குறியாக உள்ளது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கி விவகாரத்தில் மகாராஷ்டிரா  அரசு, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி இணைந்து பிரச்னைக்கு தீர்வுகாணவேண்டும். அரசின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை விவசாயிகளை துன்புறுத்துவதாக இருக்கிறது. அரசு பிரச்னைகளுக்கு தீர்வு காணத்தெரியாமல் அதனை  எதிர்க்கட்சிகள் மீது பழிபோட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேசப்பற்றுக்கு பாஜ-ஆர்.எஸ்.எஸ். சான்று தேவையில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா இப்போது விவசாயிகள் தற்கொலையில்  முதலிடத்தில் இருக்கிறது.

பொருளாதார நிலை உட்பட தொட்டதற்கெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை குறை சொல்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த ஆட்சியின் குறைகளில் இருந்து பாடம் கற்று, பொருளாதாரத்தை எதுவெல்லாம்  பாதிக்கிறது என்பதை அறிந்து நம்பத்தகுந்த தீர்வுகளை கண்டறியவேண்டும். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நீங்கள்தான் ஆட்சியில் உள்ளீர்கள். பொருளாதார பிரச்னைக்கு தீர்வுகாண இத்தனை ஆண்டுகள் போதுமானது. இவ்வாறு மன்மோகன்  சிங் கூறினார்.

Tags : Manmohan Singh , No employment, Manmohan Singh
× RELATED இந்தியாவின் பொருளாதார சீர்த்திருத்த...