×

இந்திய மீனவர்களை மீட்கச் சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரரை சுட்டுக்கொன்ற வங்கதேச வீரர்கள்

கொல்கத்தா: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் சிலர் மேற்கு வங்க எல்லையில்  உள்ள பத்மா ஆறு அருகே மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி பிடித்து சென்றனர். பின்னர், அவர்களில் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு 2 பேரை  விடுவித்தனர். அவர் திரும்பி வந்து, இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் உள்பட 6 பேர் ரோந்துப் பணியை மேற்கொண்டனர். மேலும், வங்கதேச எல்லை பாதுகாப்பு  படையிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவரை விடுவிக்குமாறு வலியுறுத்தினர். இதனை ஏற்காத அவர்கள், இந்திய வீரர்களை சுற்றி வளைக்கத் தொடங்கினர்.

இதனால் இந்திய வீரர்கள் இந்தியப் பகுதிக்கு திரும்பத் தொடங்கினர். அப்போது, வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் விஜய் பான் சிங் மற்றும்  இன்னொ வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, விஜய் பான் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் வி.கே.ஜோரி,  வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் சபினுல் இஸ்லாமை தொடர்புக் கொண்டு கண்டனம் தெரிவித்தார். சபினுலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக உறுதி அளித்துள்ளார். வங்கதேச வீரர்களின் இந்த செயலால்,  பதற்றம் நிலவுகிறது.


Tags : soldiers ,fishermen ,border guard ,Indian ,Bangladeshi , Indian fishermen, security guard, shooter, Bangladeshi soldiers
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை