×

விக்ரம் லேண்டர் விழுந்தது எங்கே? நிலவின் புதிய படங்களை ஆய்வு செய்கிறது நாசா

வாஷிங்டன்: நிலவில் விழுந்து செயல் இழந்து விட்ட விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க, அது தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட புதிய படங்களை நாசா ஆய்வு செய்து வருகிறது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. கடந்த மாதம் 17ம் தேதி திட்டமிட்டப்படி சந்திரயான்-2ன் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ தொடர்ந்து செய்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.  அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்க திட்டமிடப்பட்ட இடத்தின் படங்களை நாசா வெளியிட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த படங்களை நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் எடுத்து இருந்தது. மாலை நேரத்தில் படங்கள் எடுக்கப்பட்டதால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 14ம் தேதி புதிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை செப்டம்பர் 17ல் எடுக்கப்பட்டவற்றை விட, நல்ல வெளிச்சத்தில் உள்ளன. விஞ்ஞானிகள் இவற்றை ஆய்வு செய்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது. விக்ரம்  லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டால் அது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். இது, விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்தபோது என்ன நடந்தது என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும்.


Tags : Vikram Lander ,NASA ,moon , Vikram Lander fall, NASA analyzes ,new images,moon
× RELATED கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை