×

36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை

* சோதனை ஓட்டம் நடந்தது * விமான நிலையத்தை அதிபர் சிறீசேனா திறந்து வைத்தார்

சென்னை: சென்னை-யாழ்ப்பாணம் இடையே 36 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று விமான சோதனை ஓட்டம் நடந்தது. அதே சமயத்தில் புனரமைக்கப்பட்ட  யாழ்பாணம் விமான நிலையத்தை இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறீசேனா திறந்து வைத்தார்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஜாப்னா எனப்படும் யாழ்ப்பாணம். அங்குள்ள பலாலி விமான நிலையத்துக்கு ஏற்கனவே சென்னையில் இருந்து விமான சேவையை ஏர் இந்தியா விமானம் நடத்தி கொண்டிருந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததால் 1983ம் ஆண்டில் இருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. இலங்கையின் ெகாழும்பு நகருக்கு மட்டும் விமான சேவை இருந்து வருகிறது.அதன்பின்பு இலங்கையில், அமைதி திரும்பிய பிறகு, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு சென்னையில் இருந்து விமான சேவையை தொடங்க வேண்டும் என்று இலங்கையில் உள்ள தமிழக அமைப்புகளும், தமிழக மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஆனால் அங்கு நடந்த உள்நாட்டு போரில் விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதால் தடைபட்டு வந்தது. தற்போது, இந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டு விட்டது.இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம், யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குவது பற்றி ஆலோசித்தது.

பலாலி விமான நிலையம், ஓடுபாதை போன்றவை பெரிய அளவில் விமானம் வந்து இறங்கும் அளவுக்கு தயாராகவில்லை. எனவே அதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் அலையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடங்க முன்வந்தது. இதையடுத்து இரு நாடுகளிடையே கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. இந்நிலையில், அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏடிஆர் எனப்படும் 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை இயக்க முடிவு செய்தது. அதற்கான சோதனை ஓட்டமாக நேற்று காலை 8.55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டது.விமானத்தில், ஏர் இந்தியா நிறுவன தலைவர் அஸ்வினி லோகானி, ஏர் இந்தியா மண்டல இயக்குனர் ஹேமலதா மற்றும் உயரதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் 16 பேர் மற்றும் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என 11 பேருமாக மொத்தம் 27 பேர் சென்றனர். பயணிகளுக்கு அனுமதியில்லை.

முன்னதாக புனரமைக்கப்பட்ட யாழ்பாணம் விமான நிலையத்தை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனா திறந்து வைத்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சாந்து மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம், குறித்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் பத்திரமாக தரை இறங்கியதும் தண்ணீர் பீய்ச்சி அடித்து விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் இந்திய விமானத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இது இலங்கையின் மூன்றாவது பெரிய விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்பாணம் விமான நிலையத்தில் சிறிது நேரம் இருந்த விமானம் மீண்டும், அங்கிருந்து புறப்பட்டு பிற்பகலில் சென்னைக்கு வருகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த விமானம் எந்த தினத்தில் இருந்து பயணிகள் விமானமாக இயக்கப்படும், தினசரி விமானமா அல்லது வாரத்தில் சில தினங்கள் மட்டும் இயக்கப்படுமா. எந்த நேரத்தில் புறப்பாடு, வருகை, கட்டணம் எவ்வளவு என்பது போன்றவைகள் அலையன்ஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.வெகு விரைவில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். 36 ஆண்டுகளாக தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Chennai ,Jaffna ,Air Service , 36 years, Air service,Chennai ,Jaffna
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...