×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திடம் 7 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் அவரை கைது செய்தும் விசாரிக்கலாம் என குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கதுறை அதிகாரிகள் திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்தை நேற்று முன்தினம் காலை கைது செய்தனர்.
இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ப.சிதம்பரம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பது தான்சரியான ஒன்றாக இருக்கும். அதனால் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்’’ எனக் கோரினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தனது வாதத்தில், “ப.சிதம்பரத்திற்கு வெளிநாட்டில் பல கோடி சொத்துக்கள் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கான ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள். இதில் ஒரு வங்கிக் கணக்கு கூட அவருக்கு வெளிநாட்டில் கிடையாது என்பதுதான் உண்மை’’ என வாதிட்டார். இதேபோல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பிலும் நீதிபதி முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி உத்தரவில்,”ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அவருக்கு தனி அறை, அமரும் நிலையில் உள்ள கழிப்பறை, மருத்துவ உபகரணங்கள், வீட்டு உணவு ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் அவரை அக்டோபர். 24ம் தேதி பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என தெரிவித்த நீதிபதி, இதே விவகாரத்தில் சிபிஐ கைது செய்த வழக்கில் மேலும் ஏழு நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டிப்பதாக உத்தரவிட்டார். இருப்பினும் ப.சிதம்பரம் டெல்லி கான் மார்கெட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏசி வசதி இல்லை’
காவலில் தனக்கு ஏசி வசதி கொண்ட அறை வேண்டும் என நீதிபதி முன்னிலையில் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், கண்டிப்பாக ஏசி வசதி கொடுக்க முடியாது. சட்டத்தில் அதற்கான இடம் கிடையாது என தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி சட்ட விதிகளுக்கு உட்பட்ட அனைத்து வசதிகளையும் ப.சிதம்பரத்திற்கு செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Enforcement Department , INX Media,Abuse Case,,P Chidambaram
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...