×

கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமாள்மலைக்கு அருகில் உள்ளது மச்சூர். நேற்றிரவு கொடைக்கானல், பெருமாள்மலை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசியது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில், மச்சூர் பகுதியிலிருந்த ஒரு ராட்சத மரம், திடீரென கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையின் குறுக்கே கிடந்த ராட்சத மரத்தை எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் போக்குவரத்து சீரானது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் போக்குவரத்து தடைபட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Kodaikanal - Wattalakundu Road Giant Tree ,Severe Public Distress Kodaikanal , Kodaikanal-Wattalakundu Road, Giant Tree
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...