×

டெல்லி வன உயிரியல் பூங்காவில் நடந்த விநோதம்: சிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற இளைஞர்

டெல்லி: டெல்லி வன உயிரியல் பூங்காவில் உள்ள தடுப்பு வேலியை மீறி உள்ளே சென்று சிங்கத்தின் முன் அமர்ந்து கை கொடுக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி வன உயிரியல் பூங்காவில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் காத்திருந்தனர். அப்போது அனைவரையும் மீறி கருப்பு பனியன் அணிந்த இளைஞர் பூங்காவுக்குள் ஓடினார்.
இளைஞர் ஒருவர் உள்ளே சென்ற விஷயத்தை அறிந்ததும் பூங்கா காவலர்கள் அவரை விரட்டிச் சென்றனர். அந்த கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் சிங்கம் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள் கம்பி வேலி சூழப்பட்ட இடத்தைத் தாண்டி குதித்தார். அங்கிருந்து நடந்து சென்ற அவர் ஒரு மரத்தின் அருகே நின்றிருந்த சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்துகொண்டார்.

சிங்கத்தை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டே இருக்க சிங்கமும் அந்த இளைஞரைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பூங்கா காவலர்கள், சிங்கம் பராமரிப்பாளர்கள் அந்த இடத்துக்குள் நுழைய முயன்றனர். சிங்கத்தின் அருகே அந்த இளைஞர் செல்லச் செல்ல சிங்கம் ஒதுங்கிச் சென்றது. பின்னர் அவர் சிங்கத்தின் முன் அமர்ந்து சிங்கத்தைத் தொடர்ந்து சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிங்கம் அந்த நபரின் அருகே நெருங்கி வந்ததும் சிங்கத்திடம் கை கொடுக்க தனது கையை நீட்டினார். ஆனால் சிங்கம் அவரைப் பார்த்து சற்று பின்நோக்கி நகர்ந்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சிங்கம் இருக்கும் பகுதிக்குள் நுழைந்த காவலர்கள், சிங்கத்துக்கு மாமிசத் துண்டை வீசி அதன் கவனத்தை திசைதிருப்பினார்கள். சிங்கம் அங்கிருந்து நகர்ந்து சென்றபின் மரத்தின் அருகே அமர்ந்திருந்த அந்த இளைஞரைப் பிடித்து பூங்கா காவலர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரேஹன் கான்(28) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து டெல்லி தென்கிழக்கு போலீஸ் துணை ஆணையர் கூறுகையில், சிங்கத்திடம் இருந்து அந்த நபர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் ரேஹன் கான் எனத் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். அவர் எந்தவிதமான காயமுமின்றி மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.Tags : New Delhi Zoo Delhi , Delhi, Wildlife Zoo, Strange, Lion, Face-to-face, hands-on youth
× RELATED உயிரியல் பூங்கா விலங்கு தத்தெடுப்பு...