×

முருகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் எங்களுடையது: பெங்களூரு நீதிமன்றத்தில் லலிதா ஜுவல்லரி சார்பில் மனு

பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த கொள்ளையன் முருகனிடம் இருந்து மீட்கப்பட்ட நாஜிக்கைகள் தங்களுடையது என பெங்களூரு நீதிமன்றத்தில் லலிதா ஜுவல்லரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் மொத்தம் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 7 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன், கணேஷ், சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை விவகாரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட முருகன் கடந்த 11ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதையடுத்து ஏற்கனவே பெங்களுருவில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்குகளில் முருகன் ஈடுபட்டிருந்ததால் பெங்களூரு போலீசார் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது ஒரு குறிப்பிட்ட அளவிலான நகையை தனது சொந்த ஊரான திருவாரூரில் புதைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பெங்களூரு போலீசார் கடந்த ஞாற்றுக்கிழமையன்று சொந்த ஊருக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு காவிரி ஆற்றங்கரையோரத்தில் புதைத்து வைத்திருந்த 11 கிலோ நகைகளை மீட்டுள்ளனர். இதனை பெங்களூரு போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, நகைகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் உரிய ஆவணங்களை காட்டி நகைகளை நீதிமன்றம் மூலம் மீட்டுக்கொள்ளலாம் என பெங்களூரு போலீசார் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், முருகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் எங்களுடையது. அதனை தங்கள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், அந்த நகைகள் அனைத்திலும் லலிதா ஜுவல்லரியின் பார் கோடு உள்ளதால் இந்த நகைகள் தங்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை கடையில் கொள்ளை நடைபெற்றது தொடர்பான நகல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

Tags : jewelery ,Lalitha Jewelery ,Murugan ,Bengaluru Court , Lalitha Jewelery, jewelery robbery, petition
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...