×

மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வாகனத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு, வங்கி சாரா நிறுவனங்களிடம் போதிய பணப்புழக்கமின்மை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சரிந்து உள்ளது.


2019-2020 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜூலை மாதம் ஐஎம்எஃப் கணித்து இருந்தது. தற்போது அதை 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. ஐஎம்எப் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகப் பொருளாதார வளர்ச்சியும் 3 சதவீத அளவிலேயே இருக்கும். அந்தப் பின்புலத்தின் அடிப்படையில் பார்க்கையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பேட்டியளித்த ஐஎம்எஃப்-ன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், தற்போது இந்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் விளைவாகவே அந்த வளர்ச்சி அமையும் என்று கூறினார். ஐஎம்எப் கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த சவால்கள் இருந்தாலும் 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என கூறினார்.


இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பிஎம்சி வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிருஷ்டவசமானது. என்ன நடந்து இருந்தாலும் அந்த வங்கியின் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகாராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு ஆகியவை இணைந்து பிஎம்சி வங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.


மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது என மன்மோகன் சிங் கூறினார். மகாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



Tags : Manmohan Singh ,downturn ,Maharashtra Maharashtra , Maharashtra State, worst, economic decline, Manmohan Singh, indictment
× RELATED சக்கர நாற்காலியில் வந்த மன்மோகன் சிங்குக்கு மோடி வாழ்த்து