×

என்.ஆர்.சி-யை ராகுல் ஏன்? எதிர்க்கிறார்; 2024-ம் ஆண்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம்: அமித்ஷா பிரச்சாரம்

குருகிராம்: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபரட 21-ம் தேதி சட்டசபை  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரியானாவில் முதல் முறையாக தனிமெஜாரிட்டியுடன் ஆளும் கட்சி பாஜக உள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தன் ஆட்சியை தக்க வைக்க முயல்கிறது. இங்கு தனியாகவும், கூட்டணி அமைத்தும்  பலமுறை ஆட்சி செய்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த முறை எவருடனும் கூட்டணி வைக்காத காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடிப் போட்டி அரியானாவின் 90  தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் நிகழ்கிறது. இதனால், அரியானா மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குருகிராமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலை, ராகுல் ஏன்? எதிர்க்கிறார். இந்தியாவில் குடியேறியவர்களை  வெளியேற்ற கூடாது, வெளியேற்றினால் அவர்கள் எங்கு வாழ்வார்கள் என ராகுல் மற்றும் முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் கவலைப்படுகிறார்கள். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நினைத்து இவர்கள் ஏன் கவலைப்பட  வேண்டும். 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

1990 முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மட்டும், 40 ஆயிரம் மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனாலும், அவர்கள் 370வது பிரிவை நீக்கவில்லை. ஆனால் பாஜக அரசு நீக்கியதற்கு பல்வேறு கட்சியினர்  ஆதரவளித்தாலும் காங்கிரஸ் கட்சி எதிர்த்தது என்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர்  370வது பிரிவு நீக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் உரையாற்றினார்.




Tags : NRC ,Rahul ,The Amitsha Campaign ,Illegal Immigrants Deportation , Why is Rahul the NRC? Counters; Illegal Immigrants Deportation By 2024: The Amitsha Campaign
× RELATED சொல்லிட்டாங்க…