×

இந்தியப் பொருளாதாரம் குறித்து அபிஜித் பானர்ஜி அறிக்கை குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட அறிக்கை மத்திய அரசுக்கு குற்ற உணர்வைத் தரவில்லையா? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் திஹார் சிறையில் உள்ளார். சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் அவரை அமலாக்கப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது. அதற்கான அனுமதியும் அமலாக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.


நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது ட்விட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் செல்கிறது. இந்த நேரத்தில் நிதிச்சூழல் குறித்து கவலைப்படாமல், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும், தேவையை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில்,  இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு உணரும் வரை நாள்தோறும் இரு பொருளாதாரக் குறியீடுகளை நான் பதிவிடுவேன்.


இன்றைய பொருளாதாரக் குறியீடுகள்:

1. இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர் நுகர்வுச் செலவு குறைந்துவிட்டது. இதன்  அர்த்தம் ஏழைகள் குறைவாக நுகர்கிறார்கள்.


2. பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 112-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் நாட்டில் தீவிரமான பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ளதே ஆகும்.


இதற்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சர்வதேச நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் குறைத்து, 6.1 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துக் கணித்தது. இதுகுறித்து பிரியங்கா காந்தி ட்விட்டரில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி புள்ளிவிவரங்களை பாஜக மாற்றி, சிறப்பான பொருளாதார வளர்ச்சி இருப்பதாகக் காட்டுகிறது. உண்மைகளை மறைக்கிறது, பொய் கூறுகிறது. ஆனால் இவை எதும் பயனளிக்கப் போவதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.



Tags : Indian ,P Chidambaram ,Abhijeet Banerjee ,government , Indian Economy, Abhijeet Banerjee, Report
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...