×

சுனாமியைத் தாங்கி கஜா புயலில் வீழ்ந்த அலையாத்திக்காடுகளுக்கு ரசாயன கழிவுநீரால் ஆபத்தா?

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் உள்ள சுனாமியை தாங்கி கஜாபுயலில் வீழ்ந்துபோன அலையாத்திகாடுகளின் தற்போதைய நிலை குறித்து அரசு பள்ளி மாணவர்கள் களஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் ஆசியா கண்டத்தில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடாகும். புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும், கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதன் முதலில் தமிழகத்தை தாக்கிய பகுதி முத்துப்பேட்டை. இந்த அலையாத்தி காடுகளால்தான் சுனாமியின் அலை தடுக்கப்பட்டு இப்பகுதி மக்களை காப்பாற்றியது. 100ஆண்டுகளுக்கு மேல் வனத்துறையினரும் இயற்க்கை ஆர்வலரும் பாதுக்காத்து வந்த இந்த அறிய பொக்கிஷம் இன்று முத்துப்பேட்டை பகுதி மக்களை மட்டுமல்ல நமது தேசத்தின் அடையாளமாக இருந்து கஜா புயலால் அழிந்துள்ளது. இதன் மூலம் இந்த அலையாத்திகாட்டின் வளர்ச்சி 25ஆண்டுகள் பின்தங்கி விட்டது. இதற்கிடையில் இந்த அலையாத்திக்காட்டை ஆங்கிலத்தில் சுலோ பாய்சன் என்று கூறுவது போன்று இங்கு ஆறுகளிருந்து வரும் தண்ணீரில் மூலம் நெடுவெங்கும் பெரும் நகர்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த லகூன் பகுதியில் கலக்கிறது. இதில் குறிப்பாக முத்துப்பேட்டை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் இப்பகுதி குடியிருப்புகள் பகுதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கோரையாறு வழியாக செல்கிறது. அதேபோல் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இந்த ஆறுகள் வழியாக லகூன் சென்று அங்கு படர்ந்து இருக்கும் அலையாத்திகாடுகளை சென்று சேர்கிறது.

மேலும் இப்பகுதியில் தடை செய்யப்பட்ட இறால் பண்ணைகள் அதிகளவில் உள்ளது. இதிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனங்களை ஒரு சில இறால் பண்ணைகள் இந்த ஆறுகள் வழியாக வடிய வழிவகை செய்துள்ளதால் காடுகளின் பேரழிவுக்கு காரணமாகியுள்ளது. கஜாவிற்கு பிறகு தற்பொழுது இந்த காட்டை சீரமைத்து செம்மைப்படுத்த முத்துப்பேட்டை வனத்துறையினர் முழு முயற்சி வனத்துறை அலுவலர் தாஹிர்அலி தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அலையாத்திக்காடுகள் தற்பொழுது உள்ள நிலையை அறிய முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் ரகுராமன், நவீன் தலைமையிலான பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் குழு முத்துப்பேட்டை அலையாத்திகாடுகளின் தட்பவெப்பநிலை மாறுபாடு, சதுப்புநில உயிரிகள் பாதுகாப்பு, கஜா புயலுக்கு பிறகான மீட்டெடுப்பு, சாக்கடை கழிவு நீர், நெகிழி பொருட்கள், மருத்துவகழிவுகள் ஆறுகள் மூலம் சதுப்பு நில முகத்துவாரங்களில் கலப்பதால் அலையாத்தி மர வேர்களில் ஏற்படும் பாதிப்புகள் சார்ந்து நேற்று முதல் கள ஆராய்ச்சி துவக்கினர். முன்னதாக வனசரக அலுவலர் தாஹிர் அலி மாணவர்களை வழி அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் வனத்துறையினர் ஏற்பாடு செய்து இருந்த படகில் சென்று காட்டிற்கு சென்றனர்.இதில் கஜா புயலின் கோரதாண்டவத்திற்கு வீழ்ந்து கிடக்கும் அலையாத்தி மரங்களை கண்டு கண்கலங்கிய மாணவர்கள் குழு, கஜா மிச்சம் வைத்து சென்ற மரங்களையும் புதியதாக உருவெடுக்கும் மரங்களையும் பார்வையிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள அலையாத்தி வேர் மாதிரிகள் மற்றும் சதுப்பு நில கழிமுகங்களில் உள்ள நீர் மாதிரிகள் ஆகியற்றை சேகரித்தனர். அதேபோல் ஆறுகளின் நீர், கழிவுநீர் கலக்கும் பகுதியில் உள்ள நீர், லகூன் பகுதியில் உள்ள நீர் ஆகியவைகளையும் சேகரித்துகொண்டனர். மாணவர்களுக்கு உதவியாக வனக்காவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அன்பரசு, செல்வசிதம்பரம், முருகேசன் ஆகியோர் உடன் சென்று விளக்கினர்.

மாணவர்களின் கள ஆய்வு அறிக்கை விரைவில் ஆவணமாக தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு விரைவில் எடுத்து செல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த அறிய அலையாத்திக்காடுக்கு மீண்டும் ஒரு புத்துயிர் பிறகும் என்று இப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்: கஜாவிற்கு பிறகு எந்த நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்தோம் அதனைதொடர்ந்து இப்பகுதியில் தொடர்ச்சியாக கழிவுநீர் ரசாயன கழிவு ஆகியவைகளால் காடுகளுக்கு ஆபத்து இருக்கிறதா? ஆய்வின் இறுதியில் தெரியும் என்றனர்.

Tags : Muthupet
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...