×

அட்வான்ஸ், சரண்டர் பணம் தராததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஊட்டி: ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த 36 வார்டுகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், நாளடைவில் அவர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது நிரந்தர பணியாளர்கள் 180 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் காலை 6 மணிக்கு நடுங்கும் குளிர் என்றாலும், பனி என்றாலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள 36 வார்டுகளுக்கும் செல்கின்றனர். அங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் தீட்டுக்கல் பகுதிக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. துவக்கத்தில் இவர்களுக்கு குப்பைகளை அள்ளும் பணிகள் மட்டுமே இருந்தன.

ஆனால், தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், குப்பைகளை மூன்று வகையாக பிரித்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.  
ஆண்டு தோறும் இவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன் அட்வான்ஸ் தொகை மற்றும் சரண்டர் பணம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பண்டிகை அட்வான்ஸ் ரூ.10 ஆயிரமும், சரண்டர் பணம் ரூ.10 முதல் 15 ஆயிரம் வரை கேட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு ஊட்டி நகராட்சி நிர்வாகம் இவ்விரு பணப் பலன்களையும் வழங்கவில்லை. இது குறித்து நகராட்சி கமிஷ்னர் நாராயணனிடம் கேட்டால், அதற்கு முறையான பதிலும் அளிப்பதில்லையாம். மேலும், தூய்மை பணியாளர்களை மிகவும் மோசமாக நடத்துவதாகவும், பேசுவதாகவும் புகார்கள் உள்ளன. நேற்று தொழிலாளர்கள் பணிகளை முடித்து பிற்பகல் நகராட்சி அலுவலகத்தில் கமிஷ்னர் அறைக்கு பண்டிகை அட்வான்ஸ் மற்றும் சரண்டர் பணம் ஆகியவைகளை கேட்க சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களை கமிஷ்னர் முறையாக நடத்தாத நிலையில், அதிருப்தியடைந்த அவர்கள் நகராட்சி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, தூய்மை பணியாளர்களிடம் நகராட்சி கமிஷ்னர் நாராயணன், பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் முரளி சங்கர் ஆகியோர் துப்புரவு பணியார்களிடம் நடத்திய பேச்சுவார்தையில் வரும் 19ம் தேதி அட்வான்ஸ் பணமும், 22ம் தேதி சரண்டர் பணமும் தருவதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டததை கைவிட்டு துப்பரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், நாங்கள் ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம் எங்களுக்கு அட்வான்ஸ் மற்றும் சரண்டர் பணம் கிடைத்தால் மட்டுமே தீபாவளி பண்டிகை காலங்களில், எங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை நாங்கள் வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால், இதுவரை எங்களுக்கு இவ்விரு தொகையும் வழங்கப்படவில்லை. மேலும், இதனை கேட்டு கமிஷ்னர் அறைக்கு சென்றால் கொத்தடிமைகளை போன்று மிரட்டி வெளியேற்றுகிறார். இதனால், தொழிலாளர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், என்றனர்.

Tags : Cleanliness employees ,Surrender ,non-payment ,Ooty , Ooty
× RELATED 199 துப்பாக்கிகள் ஒப்படைப்பு